“ரசிக்கக்கூடிய பிழைகள் உள்ள படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’!” – ஆர்.பார்த்திபன்

“என்னுடைய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் ரசிக்கக்கூடிய பிழைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார் இயக்குனர் ஆர்.பார்த்திபன்.

சாந்தனு பாக்யராஜ், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் நாளை (ஜனவரி 14ஆம் தேதி) திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தை இயக்கியிருக்கும் ஆர்.பார்த்திபன் (எ) ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கூறியிருப்பதாவது:

புதுமையான சிந்தனைகள், புதுப்புது எண்ணங்கள், கறபனைகள் என இவை யாவும் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக திகழ்வது, நாம் செய்யும் சிறுசிறு பிழைகள் தான்.  என்னுடைய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படமும் ரசிக்கக்கூடிய பிழைகளை கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் உலக சினிமா. அந்த வகையில் எங்களின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் அவர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு செதுக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன்.

கதை மட்டுமில்லாமல்,  வர்த்தக வெற்றிக்கு தேவையான எல்லா சிறப்பம்சங்களையும் இந்த படத்தில் உள்ளடக்கி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை, சாந்தனு இந்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம்  மூலம் வர்த்தக நாயகனாக உருவெடுத்திருக்கிறார் என்றே சொல்வேன். இசையமைப்பாளர் சத்யாவின் மனதை மயக்கும் இசையும், பல திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் இந்த  படத்திற்கு பக்கபலமமாய் அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை நான் தனி ஒருவனாக தயாரிக்காமல், சிலரோடு கைக்கோர்த்து கூட்டு முயற்சியாக தயாரித்து இருக்கிறேன். எங்களின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை திரையிடுவதற்கு நாங்கள் மேற்கொண்ட சவால்களை வைத்து ஒரு படமே எடுக்கலாம்.

நாளை வெளியாக இருக்கும் எங்கள் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருகி வரும் எதிர்பார்ப்பை பார்க்கும்பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.