பி.டி சார் – விமர்சனம்

நடிப்பு: ஹிப்ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேஷி, தியாகராஜன், கே.பாக்யராஜ், பிரபு, ஆர்.பாண்டியராஜன், இளவரசு, முனிஷ்காந்த், பட்டிமன்றம் ராஜா, அனிகா சுரேந்திரன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஒய்.ஜி.மதுவந்தி, ஆர்.ஜே.விக்கி, சுட்டி அரவிந்த், பிரசன்னா பாலச்சந்தர், அபி நட்சத்திரா, பிரணிகா, திரிஷ்வ்சாய் மற்றும் பலர்

இயக்கம்: கார்த்திக் வேணுகோபாலன்

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

படத்தொகுப்பு: பிரசன்னா ஜி.கே

இசை: ஹிப்ஹாப் தமிழா

தயாரிப்பு: ’வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ டாக்டர் ஐசரி கே.கணேஷ்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

’பெண்ணுடல் மீது ஆணின் அத்துமீறல்’ என்ற அநாகரிகமான, அருவருப்பான, கொடிய குற்றச்செயல், நம் சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஸ்ஸில், ஆட்டோவில், கடைத் தெருவில், பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில், பொதுவெளியில், தனியிடத்தில் என அங்கிங்கெனாதபடி எங்கும் அன்றாடம் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு – பாலியல் தொல்லைகளுக்கு – ஆளாகிறார்கள் என்கிறது பெண்ணிய ஆய்வாளர்களின் புள்ளிவிவரம். இந்த கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களையே அதற்கான குற்றவாளியாகவும் ஆக்குகிறது இந்த ஆணாதிக்கச் சமூகம். “அவ அடக்க ஒடுக்கமா, ஒழுங்கா டிரஸ் பண்ணல. அது தான் அவன் மனசுல தப்பான எண்ணத்தை ஏற்படுத்திருச்சு. அவ ஒழுங்கா டிரஸ் பண்ணியிருந்தா அவன் இப்படி நடந்திருப்பானா?” என்று பிளேட்டைத் திருப்பிப் போட்டு தப்பித்துக்கொள்கிறது ஆணினம். அதற்கு ஒத்து ஊதுகிற பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். இந்த சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து, பொழுதுபோக்கு அம்சங்களுடன், கமர்ஷியலாக உருவாக்கப்பட்டிருக்கிறது ‘பி.டி சார்’ திரைப்படம்.

கொங்கு மண்டலத்தில், ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு ‘ஜிபி இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுகேஷன்’ என்ற பெயரில் பள்ளிகள், கல்லூரிகள் என 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் ‘கல்வி வள்ளல்’ என போற்றப்படும் பெரிய மனிதர் குரு புருஷோத்தமன் (தியாகராஜன்). இவரது ஈரோட்டுப் பள்ளியில் உடற்பயிற்சி (பி.டி) ஆசிரியராக பணியாற்றுகிறார் நாயகன் கனகவேல் (ஹிப்ஹாப் தமிழா ஆதி). கே.செல்வராஜ் (ஆர்.பாண்டியராஜன்) தலைமை ஆசிரியராக இருக்கும் இப்பள்ளியில் மாரிமுத்து (முனிஷ்காந்த்) உள்ளிட்டோர் ஆசிரியர்களாகவும், நாயகி வானதி (காஷ்மீரா பர்தேஷி) ஆங்கில ஆசிரியையாகவும் பணி புரிகிறார்கள்.

மாணவ – மாணவியரின் பிரியத்துக்குரிய ஆசிரியராக இருக்கும் கனகவேல், அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, பள்ளியின் மொட்டை மாடியில் உள்ள ஒரு சுவருக்கு ‘மேஜிக் வால்’ என பெயரிட்டு, “உங்கள் மனதை அழுத்தும் விருப்பங்களை இந்த சுவரில் எழுதினால், அது நிஜமாகவே நடக்கும்” என்று மாணவர்களிடம் சொல்லி ஊக்கப்படுத்துகிறார். இதற்கு நல்ல பலன் கிடைக்கிறது. இது நாளிதழில் செய்தியாக வருவதோடு, கனகவேலுக்கும், அந்த பள்ளிக்கும் நல்ல பெயர் பெற்றுத் தருகிறது. இதற்காக, ’கல்வி வள்ளல்’ குரு புருஷோத்தமன் கனகவேலை அழைத்துப் பாராட்டுகிறார்.

கனவேலின் ஜாதகத்தில் ’பிரச்சனை’ என இருப்பதால், அவர் எந்த வம்புதும்புக்கும் போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜோதிடர் எச்சரித்திருப்பதால், சிறுவயது முதலே கனகவேல் அடி-தடி எதிலும் இறங்கிவிடாதவாறு அவரை அச்சுறுத்தி கண்டிப்புடன் வளர்த்து வந்திருக்கிறார்கள் அவருடைய அம்மா மகேஸ்வரியும் (தேவதர்ஷினி), அப்பா ராஜனும் (பட்டிமன்றம் ராஜா). இதனால், கண்முன் எந்த தவறு நடந்தாலும் அதை கண்டும் காணாததுபோல் ஒதுங்கிப் போய்விடுவது கனகவேலின் சுபாவம். இந்நிலையில், வழக்கறிஞர் மாணிக்கவேலின் (பிரபு) மகளும், பள்ளியில் தன்னுடன் ஆங்கில ஆசிரியையாகப் பணி புரிபவருமான வானதி மீது கனகவேல் காதல்கொள்ள, அவர் மீது வானதிக்கும் காதல் வர, இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

கனகவேல் வீட்டுக்கு எதிர்வீட்டில் ரத்தினம் (இளவரசு) – காவேரி (வினோதினி வைத்தியநாதன்) தம்பதியர் வசிக்கிறார்கள். இவர்களது மூத்த மகள் நந்தினி (அனிகா சுரேந்திரன்). கனகவேலை அண்ணனாகப் பாவித்து அன்பு செலுத்துபவர். ‘கல்வி வள்ளல்’ குரு புருஷோத்தமன் நடத்தும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி. ஓரிரவு. அவர் கல்லூரி விழா முடிந்து வீடு திரும்புகையில், சில பொறுக்கிகளால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார். பாதிக்கப்பட்ட அவர் பக்கம் நின்று, பொறுக்கிகளை தண்டிக்க வேண்டிய சமூகம், பொறுக்கிகளை நியாயப்படுத்துவது போல், “நீ போட்டிருந்த டிரஸ் தான் இதுக்குக் காரணம்” என்று அவரையே குற்றவாளியாக்குகிறது. இந்நிலையில், அவருக்கு ‘கல்வி வள்ளல்’ குரு புருஷோத்தமன் மூலமாகவும் பாலியல் ரீதியிலான தொல்லை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் நந்தினிக்கு உதவ முற்படுகிறார் கனகவேல். எனினும், நந்தினி தற்கொலை செய்து கொள்கிறார்.

மாணவி நந்தினியின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என வழக்குத் தொடரும் கனகவேல், நந்தினியின் மரணத்துக்குக் காரணம் ‘கல்வி வள்ளல்’ குரு புருஷோத்தமன் என்கிறார். நீதிபதி தர்மதுரை (பாக்யராஜ்) முன் விசாரணை வரும் இந்த வழக்கில் கனகவேலுக்கு ஆதரவாக அவரது மாமனாரும் வழக்கறிஞருமான மாணிக்கவேலும், ‘கல்வி வள்ளல்’ குரு புருஷோத்தமனுக்கு ஆதரவாக ஆதிரை அருணாச்சலமும்  (ஒய்.ஜி.மதுவந்தி) ஆஜராகி வாதாடுகிறார்கள். இறுதியாக தீர்ப்பு வெளியாவதற்கு சற்றுமுன், யாரும் எதிர்பார்க்காத மிகப் பெரிய திருப்பம் ஒன்று ஏற்படுகிறது. அந்த திருப்பம் என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘பி.டி சார்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

பி.டி ஆசிரியராக, நாயகன் கனகவேலாக ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்திருக்கிறார். யதார்த்தத்துக்குப் புறம்பாக ’சூப்பர் ஹீரோ’ என்றெல்லாம் கொட்டமடிக்காமல், கதாபாத்திரத்துக்குள் தன்னை கனகச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமான ஆசிரியராக வலம் வரும் அவர், குழந்தைகள் மற்றும் பெண்களை கவர்ந்திழுக்கும் வகையில் கலகலப்பாக நடித்திருக்கிறார். அநீதி கண்டு ஒதுங்கிப்போகும் பயந்த சுபாவம் கொண்டவராக ஆரம்பத்தில் இருக்கும் அவர், பின்னர் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்து, ஆக்ரோஷமாக அதிரடி காட்டியிருக்கிறார். அழுத்தமான வசனங்களை வளவளவென பேசாமல், அளவாக, நெற்றிப்பொட்டில் அறைவது போல் பேசி கைதட்டல் பெறுகிறார்.

நாயகனின் காதல் மனைவியாக, ஆங்கில ஆசிரியை வானதியாக  காஷ்மீரா பர்தேஷி நடித்திருக்கிறார். அது கதையோட்டத்துக்கு பெரிதும் உதவும் முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுக்கப்பட்ட வேலையை அவர் குறைவின்றி செய்திருக்கிறார்.

கதையின் முதுகெலும்பாக, நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் – மாணவி நந்தினி. இதில் அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். கதையோட்டத்தில் திருப்பங்களை ஏற்படுத்தும் தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மிகச் சரியாக உள்வாங்கி, ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் திரையுலகில் ஒளிமயமான எதிர்காலம் அவருக்கு காத்திருக்கிறது.

வில்லனாக, ‘கல்வி வள்ளல்’ குரு புருஷோத்தமனாக தியாகராஜன் நடித்திருக்கிறார். கம்பீரமாகத் தோன்றி, மிரட்டலாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் அப்பா ராஜனாக வரும் பட்டிமன்றம் ராஜா, அவரது மனைவி மகேஸ்வரியாக வரும் தேவதர்ஷினி, நாயகனின் மாமனார் மாணிக்கவேலாக வரும் பிரபு, மாணவி நந்தினியின் அப்பா ரத்தினமாக வரும் இளவரசு, நந்தினியின் அம்மா காவேரியாக வரும் வினோதினி வைத்தியநாதன், பள்ளித் தலைமை ஆசிரியராக வரும் ஆர்.பாண்டியராஜன், ஆசிரியர் மாரிமுத்துவாக வரும் முனிஷ்காந்த், நாயகியான இங்கிலீஷ் டீச்சரை ”லவ்” பண்ணும் மாணவன் ராகுலாக வரும் திரிஷ்வ்சாய், நீதிபதி தர்மதுரையாக வரும் கே.பாக்யராஜ், வழக்கறிஞர் ஆதிரை அருணாச்சலமாக வரும் ஒய்.ஜி.மதுவந்தி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்கி இருக்கிறார். பெண்கள் – குறிப்பாக மாணவிகள் – எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் பற்றிய உண்மைச் செய்திகளை  சேகரித்து, அவற்றிலிருந்து கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை உருவாக்கி, சமூக அக்கறையுள்ள வசனங்கள் சேர்த்து, துளியும் விரசமில்லாமல், மிகுந்த பொறுப்புணர்வுடன் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். மூத்த நட்சத்திரங்களும் இளம் நட்சத்திரங்களும் கலந்த கலவையாக பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை தேர்வு செய்து, அவர்களை பக்குவமாக வேலை வாங்கியிருப்பது படத்துக்கு மிகப் பெரிய பிளஸ்ஸாக அமைந்திருக்கிறது. பச்சிளம் பெண் குழந்தைகளிலிருந்து பல்லுப்போன பாட்டிகள் வரை வயது வேறுபாடின்றி எல்லா வயதுப் பெண்களும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்பதை அழுத்தந்திருத்தமாக திரையில் தீட்டி, இக்குற்றத்தை சமூகம் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நின்று எப்படி அணுக வேண்டும் என்பதையும் கோடிட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுகள். இப்படத்தைப் பார்த்து, சம்பந்தப்பட்ட ஆண்கள் ஒரு சிலராவது தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொண்டு திருந்தினால், அதுவே இப்படைப்பாளியின் வெற்றியாக, சாதனையாக இருக்கும்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள 25-வது படம் இது. இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரகம். குறிப்பாக “அச்சமில்லை” பாடல் நரம்புகளை முறுக்கேற்றும் விதத்தில் இருக்கிறது. பின்னணி இசை – காட்சிகளுக்கும், கதாபாத்திர வடிவமைப்புகளுக்கும் வலு சேர்த்துள்ளது. இன்னும் பல நூறு படங்களுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்து சாதனை படைக்க மனதார வாழ்த்துகிறோம்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக்கி இருக்கிறது.

‘பி.டி சார்’ – இக்காலத்துக்குத் தேவையான மிக முக்கியமான படம்! அனைவரும் அவசியம் பாருங்க!