பகலறியான் – விமர்சனம்

நடிப்பு: வெற்றி, அக்‌ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினு பிரியா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: முருகன்

ஒளிப்பதிவு: அபிலாஷ்

படத்தொகுப்பு: குரு பிரதீப்

இசை: விவேக் சரோ

தயாரிப்பு: ‘ரிஷிகேஷ் எண்டர்டெயின்மெண்ட்’ லதா முருகன்

பத்திரிகை தொடர்பு: திருமுருகன்

‘பகலறியான்’ என்ற அழகிய தமிழ் தலைப்பே இப்படக்கதையின் தன்மையை உணர்த்திவிடுகிறது. ஆம், இது இரவில் நடக்கும் கதை; ஒரே இரவில் இரண்டு டிராக்குகளாகத் தொடங்கி, விரிந்து, நகர்ந்து, ஒரு புள்ளியில் சந்தித்து திருப்பத்தை ஏற்படுத்தும் திரைக்கதை; இவற்றை உள்ளடக்கிய ’சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் திரில்லர்’ இந்த ’பகலறியான்’ திரைப்படம்.

சிறுவயதில் தன் அப்பாவை கொலை செய்துவிட்டு, அதற்கான தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர் நாயகன் உல்ஃப் (வெற்றி). தன் நண்பனோடு சேர்ந்து சிறுசிறு அடி-தடி வேலைகள் செய்து வருபவர். அவரும் நாயகி அக்‌ஷராவும் (அக்‌ஷயா கந்தமுதன்) காதலிக்கிறார்கள். அப்பாவையே கொலை செய்து தண்டனை அனுபவித்தவர் என்பதால் உல்ஃபுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார் அக்‌ஷராவின் தந்தை. ஆனால், உல்ஃப் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் அக்‌ஷரா, உல்ஃபை திருமணம் செய்துகொள்ளும் முடிவுடன், யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி, உல்ஃப் கொண்டு வரும் காரில் ஏறி, கிளம்பிப் போகிறார்.

மறுபுறம், ‘சைலண்ட்’ என்ற பெயர் கொண்ட ஒரு ரவுடி (முருகன்), வீட்டை விட்டு வெளியேறிய தன் தங்கையைத் தேடி அலைகிறார். அவரின் எதிரிகள் அவருடைய தங்கையை கடத்தி வைத்துக்கொண்டு, அதன் மூலம் அவரை பழி தீர்க்க முயற்சி செய்கிறார்கள்.

தன் எதிரிகளைச் சமாளித்தவாறு தங்கையை ரவுடி சைலண்ட் தேடிக் கொண்டிருக்க, மறுபக்கம், உல்ஃப், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் நபரிடம் பணம் பெறுவதோடு, அக்‌ஷராவுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து அவரை மயக்க நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.

உல்ஃபின் இத்தகைய செயலை அறிந்து அதிர்ச்சி அடையும் அக்‌ஷரா, என்ன செய்தார்? உல்ஃப் இப்படி செய்ய என்ன காரணம்? உல்ஃப் டிராக்கும், சைலண்ட் டிராக்கும் எப்போது எப்படி சந்திக்கின்றன? விளைவு என்ன? ஆபத்தில் இருக்கும் தங்கையை தேடி அலையும் சைலண்ட், அவரை கண்டுபிடித்து காப்பாற்றினாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘பகலறியான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் என பெயர் பெற்றிருக்கும் வெற்றி, இப்படத்தில் நாயகன் உல்ஃப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் முழுவதும் அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நீலநிறக் கண்களும் இறுக்கமான முகமுமாய் மிரட்டலான லுக்கில் வரும் அவர், படத்தில் நல்லவரா, கெட்டவரா என்று பார்வையாளர்கள் சுலபமாக கண்டுபிடித்துவிட முடியாதபடி, சஸ்பென்ஸான எக்ஸ்பிரஷனை வெளிப்படுத்தி, ஆர்வத்தைத் தூண்டுவதிலும், அதை தக்க வைப்பதிலும் வெற்றி பெற்றுள்ளார். வழக்கம் போல தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் செய்திருக்கிறார்.

படம் முழுவதும் வசனம் பேசாமல், ‘சைலண்ட்’ என்ற கதாபாத்திரத்தில் இன்னொரு நாயகனாக முருகன் நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகர் போல் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அவர் வெளிப்படுத்தும் தங்கை செண்டிமெண்ட் மூலம் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.

நாயகி அக்‌ஷராவாக அக்‌ஷயா கந்தமுதன் நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். அளவாக நடிக்கிறார். சின்னச் சின்ன க்யூட் எக்ஸ்பிரஷன்கள் மூலம் பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் வினு பிரியா, கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

வழக்கமாக காமெடி வேடங்களில் வரும் சாப்ளின் பாலு, இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்துடன் அதிரடி வேடத்தில் தோன்றி அசால்ட் பண்ணியிருக்கிறார். வழக்கமாக வில்லன் வேடங்களில் வரும் தீனா, இதில் போலீஸ் அதிகாரியாகத் தோன்றி காமெடி பண்ணியிருக்கிறார்.

சைலண்ட் என்ற கதாபாத்திரத்தில் வரும் முருகனே இப்படத்தை ‘சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் திரில்லர்’ ஜானரில் எழுதி, இயக்கியிருக்கிறார். ஒரே இரவில் நடக்கும் கதையை எவ்வளவு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளார். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, விறுவிறுப்பைக் கூட்டியுள்ளார். “உங்களுக்கு தீங்கு செய்த ஒருவரை தண்டிக்க, மன்னிப்பதே சிறந்த வழி” என்ற உன்னதமான கருத்தையும், “அனைவருக்கும் இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும்” என்ற நம்பிக்கைக்கு உரிய கருத்தையும் இதில் அழுத்தந்திருத்தமாக கூறியதற்காக இயக்குநர் முருகனைப் பாராட்டலாம்.

அபிலாஷின் ஒளிப்பதிவும், விவேக் சரோவின் இசையும், குரு பிரதீப்பின் படத்தொகுப்பும் இயக்குநருக்கு பக்கபலமாக இருந்துள்ளன.

‘பகலறியான்’ – திகைக்க வைக்கும் திருப்பங்களுக்காகப் பார்க்கலாம்! மகிழலாம்!