சோனியா காந்தி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி?

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, தனது தாயார் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியங்கா காந்தி இதுவரை தனது தாயார் சோனியா காந்தி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநில ரேபரேலி மக்களவைத் தொகுதி, தனது சகோதரர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி மக்களவைத் தொகுதி ஆகியவற்றின் தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தார். எனினும், தீவிரமான அரசியலில் அவர் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு ஒரே மாதிரி இருந்தாலும், உத்தரப் பிரதேசத்தில் இந்த மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடத் தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்ட பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன.

இதனால் தனியாக உ.பி. மாநிலத்தில் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகி வருகிறது. இது சிக்கலான காலகட்டம் தான் என்கிறபோதும், தங்களின் பாரம்பரிய தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கில் பிரியங்கா காந்தியை களமிறங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. இதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமை, பிரியங்கா காந்திக்கு உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதி பொதுச்செயலாளர் பதவி வழங்கியுள்ளது.

உ.பி.யின் கிழக்குப் பகுதி என்பது இந்துக்கள் அதிகம் நிறைந்த, பாஜகவின் வலுவான கோட்டை என்று கூறப்படுகிறது. அங்குதான் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியும், உ.பி. முதல்வர் ஆதித்யநாத் முன்பு போட்டியிட்ட கோரக்பூர் தொகுதியும் இருக்கின்றன. இந்த தொகுதிகளைக் கவர பிரியங்கா காந்தியை ராகுல் காந்தி களமிறக்கியுள்ளது துணிச்சலான நடவடிக்கை என்றே கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் பிரியங்கா காந்தி ஈடுபடாமல், வரும் மக்களவைத் தேர்தலிலும்  போட்டியிடுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு அடிக்கடி ஏற்படுவதால், அவரால் அரசியலில் தீவிரமாக இறங்கிப் பணியாற்ற முடியாத சூழல் நிலவுகிறது. ஆதலால், வரும் மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவாரா என்று அவரின் சகோதரர் ராகுல் காந்தியிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது, “தேர்தலில் போட்டியிடுவது என்பது பிரியங்காவைப் பொறுத்தது. அவர் விரும்பினால் போட்டியிடுவார்” என்றார் ராகுல் காந்தி.

பிரியங்கா காந்தி நேரடி அரசியலுக்கு வருவதைக் கட்சியில் உள்ள ஏராளமான தலைவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்திரா காந்தியின் பிரதிபலிப்பாக தோற்றத்திலும், நடவடிக்கைகளிலும், செயல்பாடுகளிலும் இருப்பதால், அவரை நேரடி அரசியலில் காண காங்கிரஸ் கட்சியினர் ஆர்வமாக இருந்தனர். அது மட்டுமல்லாமல், உ.பி. மாநிலத்தை நன்கு அறிந்தவராகவும், மக்களுக்கு நன்கு அறிமுகமானவராகவும் பிரியங்கா இருப்பதால், அவர் ரேபரேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.