காலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு!

‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் அறிக்கை:

காலநிலை மாற்றம்; சமீப காலங்களில் இந்த வார்த்தையைத் தாங்கி வரும் செய்திகளை அதிகம் பார்த்திருப்போம்.

புவியினுடைய வெப்பம் தொடர்ச்சியாக அதிகரித்து வருதல், புவியின் நீண்டகால காலநிலையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதிதீவிர காலநிலை நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்றுவருகின்றன, அதிக மழைப்பொழிவு, மிக அதிகமான வெப்பம், அதிகமான புயல்கள், பனிப்பொழிவு, காட்டுத்தீ, வறட்சி வெள்ளம் என பலவிதமான காலநிலையினுடைய மாற்றத்தை சுட்டிநிற்கும் நிகழ்வுகள் அதிகம் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்திலும் காலநிலை மாற்றத்தின் சான்றுகள் நம் கண்முன்னே நிகழத்தொடங்கியுள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட சென்னை காற்று மாசு, 2015ஆம் ஆண்டு சென்னையை மூழ்கடித்த பெரும்வெள்ளம், டெல்டா பகுதியை புரட்டி போட்ட கஜா புயல் ஆகியவை காலநிலை மாற்றத்தின் அறிகுறிகளே.

பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்குமான சவாலாக மாறியுள்ளது காலநிலை மாற்றம், நம் இருத்தியலுக்கான சவாலும் கூட.

பூமியின் மீதான மனிதனின் அக்கறையற்ற செயல்பாடுகள் சமீப வருடங்களில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளாக வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுகூடி காலநிலை மாற்றத்தையும் அதன் விளைவுகளையும் எப்படிக் கையாள்வது என விவாதித்துக்கொண்டிருக்கின்றன. அதற்கான சில முயற்சிகளையும் முன்னகர்த்தி வருகின்றன. ஆனால், காலநிலை மாற்றம் என்ற பேரச்சம், பேராபத்தை கூடிய விரைவில் நிகழ்த்தி விடும் அபாயமும் கூடிக்கொண்டே வருகிறது.

காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு ( IPCC ) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையொன்றில், கடந்த பல வருடங்களில் புவியின் வெப்பம் 1 டிகிரி அதிகரித்துள்ளதுடன், இதே அளவு மாசு வெளிப்பாடு இருக்குமானால் எதிர்வரும் 2100 ஆம் ஆண்டளவில் 6.4 டிகிரி அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 150-200 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகவே இந்த வெப்பநிலை உயர்வு நடைபெறுகிறது . இப்போதுவரை அதிகரித்துள்ள வெப்பத்திற்கே அதிதீவிர காலநிலை நிகழ்வுகள் உலகெங்கிலும் நடைபெறுகின்றன. எனவே, உயர்ந்துவரும் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது ஐ.பி.சி.சி அறிக்கை.

இந்தியாவிற்கு ஏற்பட போகும் பாதிப்புகள்:

காலநிலை மாற்றத்தினால் தெற்காசிய நாடுகள் அதிகம் பாதிப்புகளுக்கு உள்ளாக போவதாகவும் இந்த நூற்றாண்டின் முடிவில் தெற்காசிய நாடுகளின் வெப்பநிலை 3.3 டிகிரி செல்சிஸ் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும்.
இதன் விளைவாக உலக மக்கள் தொகையில் 17.7% மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் உணவு பற்றாக்குறை, விலைவாசி பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, வாழ்வாதார இழப்பு, தவிர உடல்நல குறைபாடுகளுக்கு ஆளாவதுடன் காலநிலை அகதிகளாக வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அபாயம் இருப்பதாக அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.
கடல்மட்டம் உயர்வால் மும்பை, சென்னை போன்ற கடற்கரை நகரங்கள் நீருக்குள் மூழ்கும்.

உலகில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழக்கூடிய மக்கள் அதிகம் இருக்கும் இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ளப்போவது விளிம்புநிலை மக்களான மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் முதலிய உழைக்கும் மக்களும் மிக அதிகமாக பெண்களும்தான். அவர்களுக்கு காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பற்றி விழிப்புணர்வு செய்வதும், பாதிப்புகளில் இருந்து அவர்களை தற்காத்து உதவுவதும், அரசுகளுக்கு அழுத்தம் தந்து காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளை செய்ய வைப்பதும் நம்மை போன்ற சமுக இயக்கங்களின் கடமை என்ற அடிப்படையில் தமிழகத்தில் உள்ள “அரசியல், சமுக மற்றும் சூழல் இயக்கங்களுக்கான “காலநிலை மாற்றம் குறித்தான கலந்துரையாடல்” நிகழ்வை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது..

வரும் சனிக்கிழமை (30-11-2019) மாலை 5.30 மணியளவில் சென்னை பெரியமேட்டில் உள்ள மெட்ரோ மேனர் ஹோட்டலில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ஒரு இயக்கத்திற்கு இருவருக்கு (2) மிகாமல் கலந்துகொள்ள அழைக்கிறோம். நம் இருத்தியலுக்கான சவாலாக மாறியுள்ள காலநிலை மாற்றம் அனைத்து இயக்கங்களின் “செயல் திட்டத்தில்” இடம் பெறவேண்டும். வாருங்கள் விவாதிப்போம், முடிவுகளை எடுப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read previous post:
0a1a
மராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்!

தீவிர இந்துத்துவ கட்சியான சிவசேனை, ’மதச்சார்பின்மை’ கொள்கையை ஏற்க முன்வந்ததை அடுத்து அக்கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணி சார்பில் சிவசேனை

Close