“விஜய் சேதுபதி சாதாரண நடிகன் அல்ல; மகா நடிகன்”: ரஜினி பாராட்டு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையமைப்பில், திரு ஒளிப்பதிவில், ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பேட்ட’.

வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையை அடுத்துள்ள சாய்ராம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினி பேசியதாவது:

கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார். எனக்குப் பிடித்தது. பிறகு பல வருடங்கள் கழித்து திரும்பவும் அழைத்துக் கதை கேட்டேன். இந்த முறை கதையை இன்னும் அழகாக டெவலப் பண்ணி, மெருகேற்றியிருந்தார்.

பிறகு சன் பிக்சர்ஸிடம் கதை சொல்லி ஓகே பெறப்பட்டது. கலாநிதி மாறனும் மிகவும் உற்சாகமாகிவிட்டார்.

அதன்பிறகு படத்தில் ஜித்து என்றொரு கேரக்டர். இதை யார் பண்ணுறாங்கன்னு தெரியல எனக்கு. யார் பண்ணப் போறாங்கன்னு மைண்ட்ல ஓடிக்கிட்டே இருக்கு. கார்த்திக் சுப்பராஜ்கிட்ட கேட்டேன். விஜய் சேதுபதியைக் கேக்கலாமா சார்னு கேட்டார். ஒத்துக்குவாரான்னு கேட்டேன். அடுத்தநாள், சார், ஒத்துக்கிட்டார் சார்னு கார்த்திக் வந்து சொன்னார்.

இங்கே ஒரு விஷயம் சொல்லியாகணும். விஜய் சேதுபதியை சாதாரணமான நடிகன்னு நினைச்சிடாதீங்க. அவர் மகா நடிகன். அவ்வளவு அற்புதமான நடிகன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் புதுசு புதுசா பண்றாரு. முன்னாடி என்ன பண்ணினோம், இப்ப இப்படி பண்ணினா நல்லாருக்குமா, வேற பண்ணலாமான்னு யோசிச்சிக்கிட்டே இருக்காரு.

விஜய் சேதுபதி நல்ல நடிகன் மட்டுமில்ல. நல்ல மனிதனும் கூட. அவரோட பழகும்போதுதான் அவரோட நல்ல மனசு தெரிஞ்சுது. அவரோட பேச்சு, சிந்தனை, செயல் எல்லாமே வித்தியாசமா இருக்கு. புக்ஸ் படிக்கிறீங்களான்னு கேட்டேன். இல்லேன்னாரு. நிறைய படங்கள் பாக்கறீங்களான்னு கேட்டேன். இல்ல சார்னு சொன்னாரு. எல்லாத்தையுமே ரிவர்ஸா யோசிச்சுப் பார்ப்பேன்னு சொன்னாரு. ஒரு சைக்கியாட்ரிஸ்ட் மாதிரி யோசிச்சு செயல்படுறாரு விஜய் சேதுபதி.

ரொம்ப வருஷத்துக்குப் பிறகு நல்ல நடிகர் கூட நடிச்ச அனுபவம் கிடைச்சிச்சு. விஜய் சேதுபதி நல்லா இருக்கணும். உதவி செய்ற அவரோட நல்ல மனசுக்கு என்னோட வாழ்த்துகள்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.