பிடித்தெழ முயல்கிறேன்… எழுந்து விடுவேன்: பெருமாள் முருகன் அறிவிப்பு!

“பிடித்தெழ முயல்கிறேன்.. எழுந்துவிடுவேன்” என எழுத்துப் பணியை மீண்டும் தொடங்குவது குறித்து அறிவித்திருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

‘மாதொருபாகன்’ நாவலுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், “ஆசிரியர் பெருமாள்முருகன், புதைக்கப்பட்ட விஷயங்களில் இருந்து எதையெல்லாம் சிறந்ததாக எழுத முடியும் என நினைக்கிறாரோ, அதை துணிவோடு பயமின்றி எழுதட்டும்” எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு பெருமாள் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நண்பர்களே,

வணக்கம்.

தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப் புகைந்த மனத்திற்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது. ‘எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்’ என்னும் இறுதி வாசகத்தின் ஒளியைப் பற்றிப் பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன். ஒன்றுமில்லை, மகிழ்ச்சிப் பரவசம் காரணமாக இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்கிறது மனம். துணைநின்ற நண்பர்களுக்கு நன்றி. எதிர்நின்ற நண்பர்களுக்கும் நன்றி.

பூ

பெருவெடிப்புக்குப் பின்

ஒரு பூ மலர்கிறது

கூர்மணம்

நறுந்தோற்றம்

மின்பொலிவு

எல்லாவற்றையும்

எடுத்து நிறுத்துவிடும்

பூ”

இவ்வாறு பெருமாள்முருகன் கூறியிருக்கிறார்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட அமர்வு, 150 பக்கத்துக்கும் அதிகமான மிக நீண்ட உத்தரவை நேற்று (செவ்வாய்க்கிழமை) பிறப்பித்தது. அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

‘நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். ஆனால் நீ சொல்வதுதான் சரியென வாதிட்டால் அதற்காக எதிர்த்துப் போராடி சாகவும் தயங்கமாட்டேன்’ என்ற தத்துவஞானி வால்ட்டரின் வார்த்தைகள்தான் இந்த வழக்குக்கு பொருத்தமாக இருக்கும்.

இப்போது காலங்கள் மாறுகிறது. முன்பு எது ஏற்கப்படவில்லையோ, அதுதான் பின்னாளில் ஏற்கப்படுகிறது. ஒரு நாவலை படிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது அதைப் படிக்கும் வாசிப்பாளரின் விருப்பம். பிடித்தால் படிக்கட்டும். இல்லையெனில் அதை தூக்கி எறியட்டும். அதற்காக ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும், என்ன எழுதக் கூடாது என்பதை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம் அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால், இந்த வழக்கில் அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து தவறியுள்ளது. சமுதாயத்தில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் கலாச்சாரத்தைத்தான் ஆசிரியர் தனது நாவலில் பிரதிபலித்துள்ளார். இதில் எந்த தவறும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.

எனவே, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது; யாரையும் கட்டுப்படுத்தாது. மேலும் பெருமாள் முருகன் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த நாவல் விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

எந்தவொரு படைப்பாளிக்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக வழக்கறிஞர் சுரேஷ், சில வழிகாட்டுதல்களை அரசு பின்பற்றலாம் என ஆலோசனைகள் சமர்ப்பித்துள்ளார்.

படைப்பாளிகளின் கருத்துரிமை, பேச்சுரிமையை அரசு பாதுகாக்க வேண்டும். சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வெளிநபர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதை அரசு தவிர்க்க வேண்டும்.

படைப்பாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக கலை, இலக்கியம் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழுவை தமிழக அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும். இதுபோன்ற அசாதாரண சூழல்களில் பாதிப்புக்குள்ளாகும் படைப்பாளிகளுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த பிரச்சினைகளை கையாள அரசு அதிகாரிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ‘மாதொரு பாகன்’ நாவலை திரும்பப்பெற வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர் பெருமாள்முருகன், புதைக்கப்பட்ட விஷயங்களில் இருந்து எதையெல்லாம் சிறந்ததாக எழுத முடியும் என நினைக்கிறாரோ, அதை துணிவோடு பயமின்றி எழுதட்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Read previous post:
0a2e
“பெருமாள் முருகன் எழுத்துலகுக்கு திரும்ப வேண்டும்!”

பெருமாள் முருகனின் நூல் மீதான நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகாவது அவர் எழுத்துலகத்திற்கு கட்டாயம் திரும்ப வேண்டும். கவனமான உழைப்பையும் தேடலையும் கொண்டிருக்கும் அவருடைய 'பதிப்புகள் மறுபதிப்புகள்' உள்ளிட்ட

Close