திருட்டு விசிடியை ஒழிக்க இன்னொரு “டாஸ்மாக்”: சுரேஷ் காமாட்சி யோசனை!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள  ‘பகிரி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது. த்யாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவ்விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது:

இன்று தமிழ் சினிமா குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறது. சிறு படங்களுக்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான். ஆனால் படம் பார்த்து விமர்சனங்கள் பத்திரிகைகளில் வருவதற்குள் திரையரங்கில் படம் இருப்பதில்லை. தூக்கி விடுகிறார்கள்.

இன்று சினிமாவை யாரும் பார்க்காமலில்லை. திருட்டு விசிடியில் கூட காசு கொடுத்துதான் சினிமா பார்க்கிறார்கள். இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூட காசு கொடுத்துதான் பார்க்கிறார்கள்.

திரையரங்கில் போய்ப் பார்க்க ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் செலவாகிறது. ஏன் எல்லாரையும் திரையரங்குக்குப் போய் படம் பார்க்கக் கட்டாயப்படுத்த வேண்டும்? கள்ளச் சாராயத்தை ஒழிக்க ‘டாஸ்மாக்’ வந்தது போல், திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டப்பூர்வமாக்கி விடுங்கள். அதனால் வரும் வருமானத்தை ஏன் இழக்க வேண்டும்?

திரையரங்கிற்கு மக்கள் வரவில்லை என்கிறார்கள். சினிமா டிக்கெட்டை விட பார்க்கிங் கட்டணம் அதிகம்.  பார்க்கிங்கிற்கே 250 ரூபாய் செலவாகிறது. .பின் திரையரங்கிற்கு எப்படி வருவார்கள்?

காலை, மதியம் காட்சிக்கு கேண்டீனில் வியாபாரம் இல்லையென்றால் படத்தைத் தூக்கி விடுகிறார்கள். கேண்டீனில் வியாபாரம்  செய்வதற்கா தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டுப் படம் எடுக்கிறார்கள்?

தயாரிப்பாளர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுக்கிறோம். ஆனால் காலைக் காட்சிக்குக் கூட முழுதாக கூட்டம் வரவில்லை. ஆனால் அதில் நடித்த நடிகர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார். இவை எல்லாமே மாறவேண்டும்.

இவ்வாறு சுரேஷ் காமாட்சி பேசினார்.

0a2e

‘பகிரி’ படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது:

ஒரு காலத்தில் செருப்பு தைக்கிற தொழிலை கேவலமாக நினைத்தார்கள். சிலர்தான் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால்  இன்று ஆதிக்க சாதி, ஆண்ட சாதி எல்லாரும் அந்த தொழிலைச் செய்கிறார்கள். காரணம் பணம்.

ஆனால் விவசாயம் செய்ய யாரும் முன்வருவது இல்லை. காரணம்  வருமானம் இல்லை. கவனிப்பார் இல்லை. விவசாயிகள், ‘இந்தப் பிழைப்பு எங்களோடு போகட்டும்; நீ போய் வேறு பிழைப்பு பார்’ என்று தங்கள் பிள்ளைகளை வெளியே அனுப்பி விடுகிறார்கள். விவசாயம் செய்வது கேவலமாகப் பார்க்கப்படுகிறது.

தன் மகன் விவசாயி ஆக வேண்டும் என நினைத்து வளர்க்கிறார் ஒரு தந்தை. மகனும்  விவசாயி ஆக ஆசைப்படுகிறான். ஆனால் ஒருவன் என்னவாக வேண்டும் என்பது அவன் நினைத்தால் மட்டும் போதுமா? அவன் என்னவாக வேண்டும் என்று சமுதாயமும் நினைக்க வேண்டும் அல்லவா? ஒருவன் என்னவாக வேண்டும் என்கிற அந்தப் போராட்டமே ‘பகிரி’ படம்.

இப்படத்துக்கு ஆதிமுதல் அந்தம் வரை உறுதுணையாக இருந்தவர் ஒளிப்பதிவாளர் செழியன். அவர்தான்  எனக்கு இப்படத்துக்கு நாயகன், ஒளிப்பதிவாளர் எல்லாரையும் கொடுத்து உதவினார் அவர் தந்த அங்கீகாரமே படத்துக்குப் பெரிய வெற்றி.

இவ்வாறு இசக்கி கார்வண்ணன் பேசினார்.