விஜய் டிவியின் டிஆர்பி.யை உயர்த்த ஓவியா தற்கொலை முயற்சியா?: விசாரிக்க கோரி மனு!

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, தினமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு, நல்ல மன நிலையுடன் சென்று பங்கேற்ற நடிகை ஓவியா, திடீரென்று கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, மனநிலை பாதிக்கப்பட்டு, நீச்சல் குளத்து நீரில் மூழ்கி தற்கொலைக்கு முயல்வ்தாக நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்பட்டது. இது பார்வையாளர்கள் மத்தியில் பயங்கர அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஓவியாவின் இந்த தற்கொலை முயற்சி விவகாரத்தில் போலீசார் தலையிட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.எஸ்.பாலாஜி என்ற வழக்கறிஞர் அளித்துள்ள இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–

4.8.2017 அன்று 9 மணிக்கு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி, ஒரு வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் செயல்பாடுகளை முழுமையாக பதிவு செய்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி என அந்த நிகழ்ச்சியின் நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.  அத்துடன் நிகழ்ச்சி தயாரிப்பாளரின் அனுமதியுடன் மட்டுமே சில காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.  அப்படி இருக்கையில், அந்த வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நடிகை ஓவியா மூழ்கி தற்கொலைக்கு முயற்சி செய்தது ஒளிபரப்பானது.

ஓவியா மன அழுத்தத்தால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டேமோல் நிறுவனமும், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனும், விஜய் டிவியும் ஓவியாவுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கு துண்டியுள்ளனர்.  இதன் மூலம் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை அதிகரிக்கும் நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் டிவியின் டி.ஆர்.பி.யை உயர்த்துவதற்காக இது போன்று நிகழ்ச்சி நடத்தப்படுகிறதா என்பது குறித்தும் தொலைக்காட்சி நிறுவனம், நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.