ட்ரம்பை கண்டித்து விழாவை புறக்கணித்த ஈரான் இயக்குனர் படத்துக்கு ஆஸ்கர் விருது!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தடைச் சட்டத்தை கண்டித்து ஆஸ்கர் விருது விழாவை புறக்கணித்த ஈரான் நாட்டு இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதி இயக்கிய ‘தி சேல்ஸ்மேன்’ படத்துக்கு சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

ஹாலிவுட் படங்களை கவுரவிப்பதற்காகவே ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன; என்ற போதிலும், சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான விருது என்ற ஒன்று மட்டும் ஹாலிவுட் அல்லாத வெளிநாட்டு படத்துக்கு வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு லேண்ட் ஆப் மைன் (டென்மார்க்), எ மேன் கால்ட் ஓவ் (ஸ்வீடன்), தி சேல்ஸ்மேன் (ஈரான்), டான்னா (ஆஸ்திரேலியா), டோனி எர்ட்மேன் (ஜெர்மனி) ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இவற்றில், ஈரான் நாட்டைச் சேர்ந்த அஸ்கர் ஃபர்ஹதி இயக்கிய ‘தி சேல்ஸ்மேன்’ படத்திற்கு சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த விருதை வாங்க அஸ்கர் ஃபர்ஹதி நேரில் வரவில்லை.

ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். டிரம்பின் இந்த மனித தன்மையற்ற தடைச் சட்டத்தை கண்டித்தே அஸ்கர் ஃபர்ஹதி ஆஸ்கர் விழாவை புறக்கணித்தார்.

அஸ்கர் ஃபர்ஹதிக்கு பதில் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்ட அனௌஷே அன்சாரி, அஸ்கர் ஃபர்ஹதி எழுதிக் கொடுத்த கடிதத்தை விழா மேடையில் வாசித்தார். அதில், “ஆஸ்கர் விருதை இரண்டாவது முறை பெறுவதில் பெருமைப்படுகிறேன். இன்று விழாவில் கலந்து கொள்ளாததற்கு மன்னிக்கவும். என் நாடு உட்பட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதிக்கப்பட்டு, மனிதநேயமற்ற சட்டத்தால் அவமதிக்கப்பட்டுள்ளனர். அந்த 7 நாடுகளைச் சேர்ந்தவர்களை மதித்து நான் இந்த விழாவுக்கு வரவில்லை” என தெரிவித்துள்ளார் அஸ்கர் ஃபர்ஹதி..

 

Read previous post:
0a
கடைசி நேர குழறுபடிக்கு பின் ‘மூன் லைட்’ படத்துக்கு ஆஸ்கர் விருது!

ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. சிறந்த ஹாலிவுட் படத்துக்கான ஆஸ்கர்

Close