வைகோ பேசுவதே போதும்… நோட்டாவுக்கு வாக்களிக்க!

நான் ஏன் நோட்டாவுக்கு வாக்களிக்கக்கூடாது?- அரசியல் மொளகா

இத்தலைப்புக்கான கட்டுரையை எழுத அவகாசம் இல்லாமல் நான்கு நாட்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஆனால், “இதற்காகத் திரட்டிய தர்க்க வாதம் எதுவுமே தேவையில்லை, நான் பேசுவதே போதும், நோட்டோவுக்கு வாக்களிக்க” என்பதை அண்ணன் வைகோ நேற்று நிரூபித்து விட்டார்.

இந்தியாவில் தேர்தல் என்பது மக்களின் திருவிழாவாக இருந்தது ஒரு காலத்தில். ஆனால், இப்போது அது 100% அரசியல்வாதிகளின் திருவிழாவாக மாறிவிட்டது. அதோடு சேர்ந்துகொள்ள தேர்தல் ஆணையமும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த முப்பது ஆண்டுகளில் வெகுமக்கள் மற்றும் குடிமைச் சமுதாயத்தில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டது. ஆனால் இவற்றுக்கும் ,அரசியல் கட்சிகளுக்கும் எந்த ஊடாட்டங்களும் இல்லாமல் இருக்கிறது.

முதலாவதாக, தினசரி இரண்டு வேளைகள்கூட பசியாறச் சாப்பிட வழியில்லாத அன்றாடங்காட்சிகளுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர், கழிப்பிடம் போன்ற பொது சுகாதார வசதி, கட்டாய இலவச அடிப்படைக் கல்வி, பெண்கள் பாதுகாப்பு போன்றவற்றுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு புத்தாயிரமாண்டு மேம்பாட்டு 8 இலக்குகள் நிர்ணயித்து 16 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதில் 20 ஆண்டுகளுக்குள் அதாவது 2020க்குள் இலக்குகள் முழுமையாக எட்டப்பட வேண்டும் என அனைத்து நாடுகளுக்கும் அலகுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

ஆனால், தேசியக் கட்சிகள், சர்வதேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், ஜாதிக்கட்சிகள், மதக் கட்சிகள் என ஏதாவது ஒன்றாவது இவை பற்றிப் பேசியதா? குறைந்த பட்சம் தேர்தல் வாக்குறுதியாகவாவது கூறியதா? புத்தாயிரமாண்டு இலக்குகளில் கூறியுள்ளபடி இந்த நாட்டின் குடிமக்கள் இரண்டு வேளை வயிறாரச் சாப்பிட உத்தரவாதமளிப்பேன். அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவேன், அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதி செய்து தரப்படும் என்றுகூட வாக்குறுதி வழங்காத ஒரு கட்சிக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?

நிர்பயா பாலியல் வல்லுறவு கொலையைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வர்மா கமிஷன் அறிக்கை பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து தங்களிடம் வலுவான பெண்கள் அமைப்பு இருக்கிறது என்று கூறிக்கொள்ளும் கட்சிகள் கூட தேர்தல் அறிக்கையில் அறிவிக்கவில்லை. இந்த நாட்டில் பெண்கள் கவுரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ உறுதியளிக்காத கட்சிகளுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?

அனைவருக்கும் தரமான அடிப்படைக்கல்வி இலவசமாகக் கிடைக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், கல்வியில் சம வாய்ப்புகளை உருவாக்கும் பொதுப்பள்ளி முறை அவசியம், அத்துடன் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் அவசியம். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் கற்பதற்கான உபகரணங்கள் அவசியம். ஆனால் எந்த அரசும் இதற்குத் தேவையான அளவு நிதி ஒதுக்குவதில்லை. இது எத்தனை கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பேசுகின்றன.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மாறி, மாறி காங்கிரஸ், பாஜக என கூட்டணி வைத்ததால் அவற்றின் கொள்கைகள் நீர்த்துப்போய் விட்டன. அதற்கும் சமுதாயக் கொள்கைகளுக்கும் ஸ்நானப் பிராப்திகூட இல்லாமல் ஆகிவிட்டது போலத் தெரிகிறது. அதன் தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கப்படும் இலவசங்களை மக்கள் நக்கிக்கொண்டு திருப்திடையலாம்.பாஜக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும்? எல்லாரும் காலையில் எழுந்ததும் பாரத்மாதாகி ஜே சொல்லி சரஸ்வந்தனம் பாடி வந்தேமாதரம் முழங்கச் செய்வோமென சூளுரைக்கலாம்.

பாமக தேர்தலில் புள்ளி விவரங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் என்பதை அடித்துச் சொல்லலாம். ஆனால் அவர்கள் அகராதியில் சட்டம் ஒழுங்கு என்பது தலித்துகள் அடங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தருமபரி, உடுமலைப்பேட்டை கொலைகள் தொடரும்.

மக்கள் நலக்கூட்டணி சென்ற ஆண்டே குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டம் அறிவித்தது. அதற்கும் ஆறு மாதங்கள் முன்பாக மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் இரு இடது சாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தொடங்கி கூட்டியக்கமாக மக்கள் பிரச்னைகளில் தலையிட்டது.

அப்புறம் வைகோ வந்தார். அவரது கட்சியின் கொள்கைகளில் திராவிடக் கட்சிகளிலிருந்து அடிப்படை மாற்றம் இல்லாத போதும் ஸ்டிரைலைட், கோகோகோலா உள்ளிட பல தலப் பிரச்னைகளில் போராடியவர் என்ற அளவில் கூட்டியக்கத்துக்குப் பலமாக இருப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

திமுக, அதிமுக என்று மாறி – மாறி கூட்டணி அமைத்துக் கண்டபலன் ஒன்றுமில்லை என்பதால் கொள்கை அடிப்படை கொண்ட சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி, தோல்வி பற்றிக் கவலை கொள்ளாமல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மக்கள் பிரச்னைகளில் ஈடுபட்டால் ஒரு அரசியல் சக்தியாக எழும்; அதுதான் உண்மையான கொள்கை மாற்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புதான் உருவானது.

ஏனென்றால், கடந்த முப்பது ஆண்டுகளில் இக் கட்சிகள் திமுக அல்லது அதிமுக என எந்தப் பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் வெற்றிபெற்று ஆட்சி அமைந்த சில மாதங்களில் எதிரிக்கட்சி ஆக்கி விடுகின்றன. இதனால் இடது சாரி கட்சிகளும், தலித் அமைப்புகளும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இழந்து மக்கள் இயக்கங்களை வலுவாகக் கட்ட இயலவில்லை. இதனால்தான் குறைந்த பட்ச பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்த மக்கள் நல கூட்டியக்கம் வரவேற்பு பெற்றது.

இதில் வைகோ வந்து கூட்டணிக்கு எந்த கொள்கை பலமும் சேர்க்காமல் தனது அரசியல் லாபங்களுக்காகத்தான் பயன்படுத்திக் கொள்கிறார். திமுகவின் பழைய கணக்குகளை இப்போது தீர்க்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்து விஜயகாந்த் வந்தார். அதற்கும் முன்பாகவே பேர ஊகங்கள் வெளியாயின. ஆளாளுக்கு வலைவீசியவர்கள் விஜயகாந்தைப் படியவைக்க ’சி’க்களைக் காட்டியதாக வந்த செய்தி உண்மையாக இருக்குமா இல்லையா என்று முடிவு செய்யும் அவசியமே இல்லாமல் வைகோ ஆக்கிவிட்டார்.

திமுக 50 சீட்டுகளும் 500 கோடி ரூபாயும் தருவதாக விஜயகாந்திடம் பேரம் பேசியதாகக் கூறினார். இதை தேமுதிகவும் அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை. அதை அவசியமே இல்லாமல் செய்துவிட்டார் விஜயகாந்திடம் முப்பது ஆண்டுகள் நெருக்கமாக இருந்த சந்திரகுமார்.

தேமுதிக – திமுக கூட்டணி அமையும் என்பதற்காக சொத்து முழுவதையும் இழந்து விட்டேன் என்று அழாத குறையாகக் கூறுகிறார் சந்திரகுமார். பாஜகவிடம் விஜயகாந்த் வேறு எதையோ எதிர்பார்த்தார் என்றும் தனது கட்சித்தலைவர் மீதே புகார் கூறுகிறார். அப்படியானால் கூட்டணி தொடர்பாக வேறு சிந்தனைகள் இருந்து கடைசியில்தான் அதை மாற்றியுள்ளார் விஜயகாந்த். திமுக உடன் பேச்சு. பாஜவுடனும் பேச்சு. கடைசியில் ம.ந.கூவுடன் உடன்பாடு!

இது என்ன ஒரு கட்சி? இதற்கு என்ன கொள்கை இருக்கமுடியும்?

வெறும் பதவி வெறி, இல்லை ஆசை என்றுகூட நாகரிகமாகச் சொல்லிக்கொள்ளலாம்.

திமுக, அதிமுக பலவீனமாக இருக்கிறது; பாமக தனியாக நிற்கிறது. இதனால் ஒரு வருசமாக மக்கள் இயக்கம் நடத்தி பெயர் சம்பாதித்திருக்கும் ம.ந.கூட்டணியுடன் சேர்ந்தால் அதன் வாக்குகளைப்பெற்று ஒரு வேளை பதவிக்கு வரலாம். அல்லது கணிசமான இடங்கள் வந்தால் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டனி பேரத்தில் முன்பு தருவதாகச் சொல்லப்பட்ட தொகையைவிட அதிகமாகப் பெறலாம் என்ற எண்ணம்தானோ!

மக்கள் நலக் கூட்டியக்கம் வைகோ – விஜயகாந்த் சதிக்கு இரையாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது!

கடைசியாக வைகோ நேற்று திருவாய் மலர்ந்த விஷயம்! அதில் கருணாநிதியின் குலத்தொழில் பற்றிக்கூறியதே அநியாய நாகரிகம். ஆனால் அதற்கு முன்பாக அவர் பேசியதாகக் கூறப்படுவதைக் கேள்விப்படும் போதே உடல் கூசுகிறது. நிச்சயம் இது அரசியல் தற்கொலைதான்! அப்படித்தான் பேசினார் என்றால் தனது கட்சிப்பெயரில் உள்ள திராவிட, மறுமலர்ச்சி ஆகிய வார்த்தைகளை அவர் எடுத்து விடலாம்.

ஏனென்றால் எந்த சாதி ஒழிப்புகாகப் பெரியார் போராடினாரோ, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் எந்த சாதி இழிவு அழிய வேண்டும் என்பதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டாரோ அதே சாதியைச் சொல்லி, எந்த குலத்தொழில் அழிய வேண்டுமென அண்ணா போராடினாரோ அதே சாதி பெயரைச் சொல்லி, அதே குலத்தொழிலுக்குத் திரும்பச் சொல்லும் நபர் எப்படி திராவிட இயக்கத்தவராகவோ மறுமலர்ச்சியாளராகவோ இருக்க முடியும்.

இவர்கள் புத்தாயிரமாண்டு இலக்குகள் குறித்தோ, பெண்களின் கவுரவம் பாதுகாப்பு குறித்தோ, குலத்தொழிலிருந்து மீட்க அனைவருக்கு தரமான அடிப்படைக்கல்வியை அளிப்பது குறித்தோ வாக்குறுதி அளிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.அதனால், எனது அதிருப்தியை அனைத்து கட்சிகளுக்கும் உணர்த்த நான் ஏன் நோட்டோவுக்கு வாக்களிக்கக்கூடாது?

– அப்பண்ணசாமி

courtesy: minnambalamdotcom

(குறிப்பு: அப்பண்ணசாமியின் மேற்கண்ட கருத்துக்களோடு உடன்படும் நான், “இன்றைய இந்திய தேர்தல் முறையே முறையற்றது. விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வர வேண்டும். தவறு செய்யும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமையை வாக்காளர்களுக்குத் தர வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் எந்த அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையில் சொல்லி விவாதப்பொருள் ஆக்குவதே இல்லை. அப்படிப்பட்டவர்களை நிராகரிக்க நான் ஏன் நோட்டாவுக்கு வாக்களிக்கக் கூடாது?” என்ற என் கருத்தையும் இதோடு சேர்த்து முன்வைக்கிறேன். – ஆசிரியர், ஹீரோநியூஸ் ஆன்லைன் டாட்காம்.)

Read previous post:
0a1r
‘சந்திரகுமார் அண்ட் கோ’வின் கலகத்துக்கு காரணம் சாதிவெறி?

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டு சேர்ந்ததால், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காகவும் தேர்தல் பணிகளைச் செய்ய நேரிடும் என்பதாலும், அதில் விருப்பம் இல்லை என்பதாலும்தான் தேமுதிக

Close