“எந்த மாநில ஆண்களுக்கு ஆண்மை அதிகம் என ‘நீயா நானா’வில் விவாதம் நடத்த இயலுமா?”

வாரம்தோறும் ஞாயிறு அன்று விஜய் டிவியில் கோபிநாத் நெறியாளுகை செய்யும் ‘நீயா நானா’ என்ற விவாத  நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் “யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா?” என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தலைப்பு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. பெண்களை காட்சிப் பொருளாகப் பார்ப்பது மட்டுமின்றி, அதை வைத்து விவாதம் நடத்துவதற்கு பலதரப்பினரிடமிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. பெண்கள், பொதுமக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தன.

உதாரணமாக, GEETHA NARAYANAN தனது முகநூல் பதிவில், “தமிழ்நாட்டையும்,கேரளாவையும் ஒப்பிட வேண்டுமெனில், எத்தனையோ தலைப்புகளில் அதை செய்ய முடியும். ஆட்சி தொழிற்சங்கங்கள், நீர் மேலாண்மை, பொது சுகாதாரம், திரைத்துறை, இரு பக்கமும் உள்ள நாட்டுப்புற வடிவங்கள், கவிதைகள் என விடயங்களா இல்லை? இரு பக்கமும் உள்ள பெண் விவசாயிகள் சங்கங்களை அழைத்து இரு பக்க அனுபவத்தையும் கேட்கலாம் என ஏன் தோன்றவில்லை? ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். இரு மாநிலங்களில் உள்ள ஆண்களில், யார் ஆண்மை (அபத்த வார்த்தை தான்) அதிகமுடையோர் என்று ஒரு தலைப்பு வைத்திருந்தால் தமிழகம் எப்படி வெகுண்டெழுந்திருக்கும்? எத்தனை கலாச்சார புத்திமதிகள் சொல்லப்பட்டிருக்கும்? இப்போது ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இன்றைய ‘நீயா நானா’ நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பெண்ணிய அமைப்பினர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, அழகு தொடர்பான ‘நீயா நானா’ ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் அதிகாரபூர்வ தகவல் வெளியானது.