‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநருக்கு ஒன்றிய அரசு விருது: கேரள முதல்வர் கண்டனம்!

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுக்கு சிறந்த இயக்குநருக்கான ஒன்றிய அரசு விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
71-வது ஒன்றிய அரசின் திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 01) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த இயக்குநருக்கான ஒன்றிய அரசு விருது, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:
“கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப் பெரிய அவமானத்தை தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும்.”
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.