இந்தியர்களுக்கு நரேந்திர மோடி! அமெரிக்கர்களுக்கு டொனால்டு ட்ரம்ப்!!

2014 தேர்தல்களின்போது, ‘மோடி ஜெயிக்க மாட்டார், இந்தியாவைப் போல ஒரு நாட்டில் அந்த விபத்து நிகழாது’ என்று தீவிரமாக நம்பியிருந்தேன். ‘நாம் நினைக்கும் இந்தியா இல்லை நாம் வாழும் இந்தியா’ என்கிற உண்மையை முகத்தில் அறைந்து உணர்த்தியது மோடியின் வெற்றி.

அன்று எனக்கிருந்த, என்னைப் போல ஆயிரக்கணக்கானவருக்கு இருந்த குற்றவுணர்வை லேசாக்கியிருக்கிறது அமெரிக்கா. டொனால்ட் டிரம்பை அதன் அதிபராக தேர்ந்தெடுத்திருக்கிறது.

பெண்வெறுப்பு, சிறுபான்மையினர் மீதான வன்மம் என்பது போன்ற ‘நற்குணங்களில்’ திளைப்பவர்தான் டிரம்ப். மிக அதிர்ச்சிகரமானவை அவர் வெளிப்படையாக பேசிய வெறுப்பு கருத்துகள்.

“கருத்தடையை சட்டப்படி குற்றமாக மாற்றி, கருத்தடை செய்துகொண்ட பெண்களை தண்டிக்க வேண்டும்” என்பது டிரம்பின் பிற்போக்கு கருத்துகளில் ஒன்று. பெண்களை பற்றி, கறுப்பினத்தவரைப் பற்றி அவர் பேசுவதெல்லாம் வெறுப்பு தோய்ந்த வார்த்தைகள்தான்.

டிரம்ப் வெற்றி பெற்றிருப்பது முழுக்க முழுக்க வெள்ளை இனத்தவர்களின் ஆதரவால்தான். நிறவெறி, இனவெறி, பெண் வெறுப்பு எல்லாம் அமெரிக்க சாதாரண மக்களிடத்தில் இன்னமும் வேரூன்றிதானிருக்கிறது.

நாம் நம்பும் மாற்றம் வரவில்லை என்பதைதான் டிரம்பின் வெற்றி காட்டுகிறது. தனது முற்போக்கு பூச்சுகளை உதிர்த்துவிட்டு இன்று நிற்கிறது அமெரிக்கா.

மிக அடிப்படையான இன்னொரு விஷயம். இன்று வரை ஒரு பெண் அதிபர்கூட அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த முறையும் ஒரு வரலாற்று தருணத்தை தவற விட்டிருக்கிறது அமெரிக்கா.

ஆனால், வேறொரு வரலாற்று தருணத்தை உருவாக்கியிருக்கிறது. ஹிட்லர் உருவானது வரலாற்று தருணம் என்றால், அமெரிக்காவிற்கு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதும் வரலாற்று தருணம்தான்.

தனது நிஜ முகத்தை காட்டியிருப்பதற்காக அமெரிக்காவை வாழ்த்தலாம்! வேறு என்ன செய்ய?

Sundar Rajan