ஆளுநர் – நிர்மலாதேவி விவகாரம்: நக்கீரன் கோபால் கைது; தேசதுரோக வழக்கு பதிவு!

இனிப்பான ஆசை வார்த்தைகள் கூறி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் பேராசிரியையான நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப்ட்டார். இந்த விவகாரத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

மாணவிகளை தவறான பாதைக்கு நிர்மலாதேவி செல்பேசியில் அழைக்கும் ஆடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் கசிந்து வைரலானது. அதில் நிர்மலாதேவி “கவர்னர்” என ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அல்லது ஆளுநர் மாளிகையோடு தொடர்புடைய ஒருவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்குமோ என பலத்த சந்தேகம் கிளப்பட்டது. இதனால் பன்வாரிலால் புரோகித் பதவி விலக வேண்டும், அல்லது அவரை மத்திய மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனக்கும் நிர்மலாதேவி விவகாரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தன்னிலை விளக்கம் அளித்தார். மேலும் இது குறித்து விசாரித்து அறிக்கை கொடுப்பதற்காக அவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி சந்தானத்தை நியமித்தார். சந்தானமும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்துமுடித்து, அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்துவிட்டார். அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், நிர்மலாதேவியை ஆளுநரோடு தொடர்புபடுத்தி, நக்கீரன் பத்திரிகையில் பல செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை போலீசார் இன்று காலை கைது செய்தனர். சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை போலீசார் தடுத்து நிறுத்தி, ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்து, சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நக்கீரன் கோபால் ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில், அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.