பாவனாவுக்கு நேர்ந்த கலவியல் துன்புறுத்தல்: கேரள முதல்வருக்கு நடிகர் சங்கம் கடிதம்!

நடிகை பாவனா கலவியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக மேற்கொள்ள கோரி, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தமிழ் நாட்டு நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “எங்களது உறுப்பினர் பாவனா கடந்த 17-ம் தேதி நள்ளிரவில் அவரது ஓட்டுநர் மற்றும் அந்த ஓட்டுநரின் சகாக்கள் அடங்கிய கும்பலால் கலவியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் குறித்து நீங்கள் அறிவீர்கள்.

இந்தக் கொடூர சம்பவத்தால் எங்களது சங்கத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களில் மூளையாக இருந்து செயல்பட்டவர் அந்த ஓட்டுநர்தான் என்பதை எளிதில் கணிக்க முடிகிறது.

பிரபலமான பெண் ஒருவருக்கே நம் மாநிலத்திலும் நாட்டிலும் பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலையை கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இந்தச் சூழலைக் கருத்தில்கொண்டு, நீங்கள் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கையை உடனே விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை காலதாமதமின்றி நீதியின் முன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.