நடிகையர் திலகம் – விமர்சனம்

“…வழிகாட்டலின்றி ஒரு கலைஞர் வீழ்ச்சியுற்ற கதை.

தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மதுசூதனராவுக்கு ஒரு ஆசை. ‘நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து, தற்போது உடம்பு கொஞ்சம் கனத்துப் போய்விட்டதால் அதிக வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகை சாவித்திரியை டைரக்ட் செய்ய வைத்து ஒரு படத்தை உருவாக்கினால் பரபரப்பாக இருக்குமே?’

சாவித்திரியைத் தேடி வந்தார். “இதோ பாரம்மா… எங்கள் டைரக்டர் ஆதுர்த்தி சுப்பராவ் ரொம்ப பிஸியாகி விட்டார். அதனால் எங்கள் கம்பெனியின் அடுத்த படத்தை நீ டைரக்ட் செய்ய வேண்டும்.”

உடனே சம்மதம் சொல்லவில்லை சாவித்திரி. சில நாட்களுக்குப்பின் திருமதி மதுசூதனராவ் வந்தார்.

“இருங்கள் ஒரு நிமிடம். அவரைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு, தன் கணவர் ஜெமினி கணேசனுக்குப் போன் செய்தார் சாவித்திரி.

“உன்னை டைரக்ட் செய்யச் சொல்றாங்க, அவ்வளவு தானே! தயங்காம ஒத்துக்கோ” என்றார் ஜெமினி கணேசன். வேண்டாம் என்று அவர் தடுத்திருக்கலாம்.

தயாரிப்பாளர் – திருமதி மதுசூதனராவ்; டைரக்டர் – சாவித்திரி; உதவி டைரக்டர் – மோகனகுமாரி; கதை – சரோஜினி; இசையமைப்பாளர் – பி.லீலா… தெலுங்குப்படம் உருவாகி வெளியாகியது.

தமிழ்ப்படம் ஒன்றை டைரக்ட் செய்ய சாவித்திரிக்கு ஆசை வந்தது. தமிழ்ப் படத்தில் நடித்து வெகு நாட்களாகி விட்டனவே…

தமிழ்ப் படத்தை டைரக்ட் செய்ய எந்தத் தயாரிப்பாளரும் கூப்பிடவில்லை…

‘சொந்தத்தில் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்து டைரக்ட் செய்தால்? அதில் நடித்தால்?

சொந்தப் படம் தமிழில் தயாரிக்கவும், டைரக்ட் செய்யவும் முற்பட்டார் சாவித்திரி. கதாநாயகன் – ஜெமினி கணேசன் தான். “வேண்டாம். சொந்தப் படமும் வேண்டாம். டைரக்சனும் வேண்டாம்” என்று தடுத்திருக்கலாம் ஜெமினி கணேசன்.

ஸ்ரீ சாவித்திரி புரொடக்சன்ஸ் அளிக்கும் ‘குழந்தை உள்ளம்’ தயாராகியது; வெளிவந்தது; வசூலில் தோல்வி கண்டது…

‘அடுத்து ஒரு பெரிய ஸ்டாரைப் போட்டு, படம் தயாரித்து, டைரக்ட் செய்தால், இழந்த பொருளை மீட்டு விடலாமே…’

சிவாஜி கணேசனிடம் வந்தார் சாவித்திரி. நடிகர்களின் தலைவர் என்ற முறையிலும், சாவித்திரியின் நண்பர் என்ற முறையிலும், “சொந்தப் பட ஆசை வேண்டாம்” என்று கூறி சிவாஜி கணேசன் தடுத்திருக்கலாம்…

1971-ல் சாவித்திரி டைரக்சனில், சிவாஜி கணேசன் நடித்த ‘பிராப்தம்’ வெளிவந்து, வசூலில் படுதோல்வி அடைந்தது…..”

அறந்தை நாராயணன், ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலில்..

# # #

0a1c

ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் சாதாரண கிராமத்தில் பிறந்து, முதலில் மேடை நாடகங்களிலும், பின்னர் திரைப்படங்களிலும் நடித்து, ‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்டு, ‘தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார்’ என கொண்டாடப்பட்ட சாவித்திரி, பிரபல எழுத்தாளர் அறந்தை நாராயணன் மேலே கூறியிருப்பதைப் போல, முறையான வழிகாட்டல் இல்லாததால் டைரக்ட் செய்யவும், சொந்தமாய் படம் தயாரிக்கவும், உடம்பு கனத்த பிறகும் தொடர்ந்து நாயகியாக நடிக்கவும் ஆசைப்பட்டு, சம்பாதித்த செல்வங்கள் அனைத்தையும் இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி, குடியடிமை ஆகி, கோமாவில் வீழ்ந்து, பரிதாபமாக மரணம் அடைந்தார்.

சாவித்திரியின் இந்த திரையுலக வாழ்க்கையில் இருந்தும், ‘காதல் மன்னன்’ என்பதை ஏதோ படித்து வாங்கிய பட்டம் போல் போட்டுத் திரிந்த நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து, அவரது மூன்றாவது மனைவியாகி, கொஞ்சம் மகிழ்ச்சியும், நிறைய அவஸ்தையுமாய் அல்லல்ப்பட்ட சாவித்திரியின் குடும்ப வாழ்க்கையிலிருந்தும் சில முக்கிய சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து திரைக்கதை ஆக்கி, ‘நடிகையர் திலகம்’ என்ற திரைப்படமாக எடுத்து, சாவித்திரிக்கு புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின்.

சாவித்திரி வேடத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். நவரச நடிப்பில் உச்சம் தொட்ட சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷா? குருவி தலையில் பனங்காயா? என்றெல்லாம் இப்படம் வருவதற்குமுன் கொந்தளித்தவர்கள், படத்தைப் பார்த்தவுடன் தங்கள் எண்ணத்தை நிச்சயம் மாற்றிக்கொள்வார்கள். சாவித்திரி என்னும் பனங்காயை மிகுந்த சிரத்தையுடன், கவனமாக, அழகாக, அற்புதமாக, வெற்றிகரமாக சுமந்து சென்றிருக்கிறது கீர்த்தி சுரேஷ் என்னும் குருவி! சாவித்திரியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்த கீர்த்தி சுரேஷ் போட்டிருக்கும் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்.

சாவித்திரியின் காதல் கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். மீசையைத் தவிர துல்கர் சல்மானுக்கும் ஜெமினி கணேசனுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்ற போதிலும், தன்னால் இயன்ற அளவு சிறப்பாக நடித்து தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் துல்கர் சல்மான்.

மருத்துவமனையில் சாவித்திரி கோமாவில் கிடந்த இறுதி நாட்களில் அவர் பற்றிய செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர் சமந்தா மூலம் சாவித்திரியின் வாழ்க்கைக் கதை திரையில் விரிவதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 1981ஆம் ஆண்டில் சமந்தா அளவுக்கு அம்மாஞ்சியாக எந்தப் பத்திரிகையாளரும் இருந்ததில்லை என்பது ஏனோ இயக்குனருக்கு தெரியாமல் போய் விட்டது. சமந்தா வரும் காட்சிகள் படத்துக்குத் தொய்வு.

இப்படம் ஆவணப்படம் போல் ஆகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் காட்சிகளை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்ததற்காக இயக்குனரை பாராட்டலாம். ஆனால், ‘நவராத்திரி’, திருவிளையாடல்’, ‘வேட்டைக்காரன்’, ‘களத்தூர் கண்ணம்மா’ போன்ற நேரடி தமிழ்ப் படங்களில் சாவித்திரி ஆற்றியிருக்கும் மிகப் பெரிய பங்களிப்பை திரைக்குக் கொண்டு வராமல், சாவித்திரியின் தெலுங்கு திரையுலக பங்களிப்பை மட்டும் பெருமளவுக்கு காட்டியிருப்பது தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தைத் தரும்.

மிக்கி ஜெ மெயர் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. டேனி சஞ்செஸ் – லோபெஸ் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். மதன் கார்க்கியின் வசனமும், பாடல் வரிகளும் இதம்.

நிஜ வாழ்க்கையில் சாவித்திரி மரணம் அடைந்த அன்று, நான் வேலை பார்த்த நாளிதழில், சாவித்திரி சடலத்தின் படத்தைப் போட்டு, அதற்குக் கீழே “மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்” என்ற வாசகம் எழுதப்பட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

ஆம்… அக்காலத்தில் தமிழகத்தில் சாவித்திரியை சகோதரியாகப் பார்த்து, பாவித்து, ஆராதனை செய்தவர்களே அதிகம்.

‘நடிகையர் திலகம்’ – இளம் நடிகைகளுக்கு எச்சரிக்கைப் பாடம்!