இரும்புத்திரை – விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடியும், அவரது பாரதிய ஜனதாக் கட்சி அரசும் இந்தியாவை ‘டிஜிட்டல் இந்தியா’வாக மாற்றிக்கொண்டிருப்பதாக 56 அங்குல மார்பை விரித்து பெருமையுடன் பீற்றிக்கொண்டிருக்க, அதே ‘டிஜிட்டல் இந்தியா’வில், அதே டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி சாமானிய இந்தியர்களின் வங்கிப் பணத்தை சில ‘ஒயிட் காலர் கிரிமினல்’கள் களவாடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை, காவிகளின் நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த துணிச்சலுடன் வந்திருக்கிறது ‘இரும்புத்திரை’

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரைப் பற்றிய ரகசிய தகவல்களும் எங்களுக்கு தெரிந்தே ஆக வேண்டும் என்று இந்திய அரசு கெடுபிடி செய்து, ‘ஆதார்’ என்ற பெயரில் தகவல்களை திரட்டி வைத்திருக்கிறது. இது போதாதென்று ஆதார் எண்ணை கேஸ் வினியோகத்துடன் இணை, வங்கிக் கணக்குடன் இணை, பான் கார்டுடன் இணை, ரேஷன் கார்டுடன் இணை, சிம் கார்டுடன் இணை என்று மிரட்டி நம்மைப் பற்றிய ரகசிய தகவல்களை வேறு பலவற்றுடனும் முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறது. ஆனால், இப்படியெல்லாம் சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் அரசு, இந்த ரகசிய தகவல்களை களவு போகாமல் பாதுகாப்பதற்கு உரிய ஏற்பாடுகள் எதையாவது செய்திருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. அரசின் இந்த பொறுப்பின்மையின் அபாயகரமான விளைவை, எந்தப் பூச்சும் இல்லாமல் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது ‘இரும்புத்திரை’.

நம்மைப் பற்றிய ஒவ்வொரு ரகசியத் தகவலும் ஹேக் செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரகசியத் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒயிட் காலர் கிரிமினல்கள், அதை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். உஷார்… என நம்மை எச்சரிப்பதற்காக, தற்காலத்துக்கு மிக மிக அவசியமான இப்படத்தை கலை நயத்துடனும், கருத்தாழத்துடனும் பாராட்டத்தக்க வகையில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன்.

நாயகன் விஷால் ராணுவத்தில் மேஜராக பணிபுரிகிறார். அவரது தங்கையின் திருமணச் செலவுக்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக சொந்த வீட்டை விற்று 4 லட்சம் ரூபாயும், பெர்சனல் லோன் போட்டு 6 லட்சம் ரூபாயும் புரட்டும் விஷால், மொத்தமுள்ள 10 லட்சம் ரூபாயையும் தனது தந்தை டெல்லி கணேஷின் வங்கிக் கணக்கில் போடுகிறார்.

மறுநாள் திருமணச் செலவு ஒன்றுக்கு பணம் எடுக்கப் போனால், “உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருப்பு இல்லை” என்ற அதிர்ச்சியூட்டும் தகவலைத் தருகிறது ஏடிஎம் எந்திரம். வங்கிக் கணக்கில் இருந்த மொத்தப் பணமும் ஹேக்கர்களால் திருடப்பட்டு விட்டது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார் விஷால்.

களவுபோன பணத்தை மீட்கும் முயற்சியில் விஷால் இறங்குகிறார். அப்போது தான் டிஜிட்டல் உலகில் நடக்கும் அயோக்கியத்தனங்களும், அதற்கு மூளையாக – கண்ணுக்குப் புலப்படாமல் எங்கோ மறைவில் இருந்துகொண்டு – நோகாமல் பணத்தை அள்ளும் தலைவனைப் பற்றியும் தெரிய வருகிறது.

அந்த தலைவன் யார்? அங்கு நடக்கும் தில்லுமுல்லுகள் என்னென்ன? விஷால் தன் பணத்தை மீட்டாரா? என்பது மீதிக்கதை.

0a1c

கதை வித்தியாசமாக இருப்பதைப் போலவே நடிப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் நாயகன் விஷால். வழக்கமான மசாலா ஆக்ஷன் பாணி இல்லாமல், நுண்ணறிவுடன் இயங்கும் கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். கம்பீரமான ராணுவ மேஜராகவும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்கப் பாடுபடும் பொறுப்புள்ள அண்ணனாகவும், பறிபோன பணத்தை கண்டுபிடிக்க களமிறங்கும் அசகாய சூரனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விஷால் கேரியரில் இந்தப் படம் அவருக்கு ஒரு மைல் கல்.

‘ஒயிட் டெவில்’ என்ற டிஜிட்டல் உலக தாதாவாக வரும் அர்ஜூன் வில்லன் வேடத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு உச்சரிப்பையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். இந்த கதாபாத்திரத்துக்கு இவரைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது.

மனநல மருத்துவராகவும், விஷாலின் காதலியாகவும் வருகிறார் நாயகி சமந்தா. புன்னகை சிந்தும் சாந்தமான முகத்துடன் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

கிடைத்த இடத்திலெல்லாம் கடன் வாங்கும் நடுத்தர வர்க்கத்து தந்தையாக வரும் டெல்லி கணேஷ் சிரிக்க வைக்கிறார். சில காட்சிகளில் நெகிழவும் வைக்கிறார். ரோபோ சங்கர் காமெடியில் கலக்கியிருக்கிறார்.

ஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் உலகால் எதிர்காலத்தில் சாதாரண மக்களின் தனி மனித சுதந்திரம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை பாமர ரசிகனும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் திரைக்கதை அமைத்து படத்தை நகர்த்தியிருக்கும் இயக்குனர் பி.எஸ்.மித்ரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த படத்துக்காக அவர் சமூகப் பொறுப்புடன் எவ்வளவு தகவல்கள் திரட்டியிருக்கிறார் என்பதை அறியும்போது மலைப்பாக இருக்கிறது. அவரது உழைப்புக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இதே தனித்தன்மையுடன் அவர் தொடர்ந்து படம் பண்ண நம் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

‘இரும்புத்திரை’ – பொறுப்பற்ற மோடி அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’வில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தன்னை எச்சரிக்கையுடன் தற்காத்துக் கொள்வதற்காகவாவது அவசியம் பார்க்க வேண்டிய படம்!