மோடி அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தும் மம்தா பானர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு!

வருகிற மக்களவைத் தேர்தலில் மோடியின் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்கவும், இதற்காக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ‘ரோஸ் வேலி’, ‘சாரதா சிட்பண்ட்ஸ்’ ஆகிய இரு நிதி நிறுவனங்களில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக  கொல்கத்தா போலீஸ் கமிஷனரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  இரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். “நாட்டை, அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும்வரை எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

மம்தாவின் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கவுடா மற்றும் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேவா கட்சியின் ராஜ் தாக்கரே உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மம்தாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”மத்திய பாசிச பாஜக அரசு சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகளை எல்லாம், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சமரசத்துக்கு உள்ளாக்கியுள்ளது. நாட்டின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி அவர்களுக்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன். #ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.