“ஆய்வு வேண்டாம் ஆளுநரே! பெரும்பான்மையை நிரூபிக்க பழனிசாமிக்கு உத்தரவிடுங்கள்!” – மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இரண்டு நாள் பயணமாக கோயம்புத்தூர் சென்றுள்ளார். அங்கு, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார். இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் பன்வாரிலாலின் ஆய்வு நடவடிக்கை சீரான நிர்வாகத்தைச் சிதைப்பதாக உள்ளது. நிர்வாகத்தைச் சீர்படுத்த விரும்பினால், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

மாநில நிர்வாகத்தில் தலையிட புதுச்சேரி ஆளுநருக்கு உள்ள குறைந்தபட்ச அதிகாரம்கூட, தமிழக ஆளுநருக்கு கிடையாது. ஆளுநரின் இத்தகைய ஆய்வு, மத்திய-மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்துக்கோ துளியும் உதவாது. ஆளுநர் இது போன்ற ஆய்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.