ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பாரபட்சம்: தேநீர் விருந்தை புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பதவியேற்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என  ஆட்சேபம் தெரிவித்து தேநீர் விருந்தை புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின்.

ஆளுநர் மாளிகையில் புதிய ஆளுநர் பன்வாரிலாலுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்தபின் வாழ்த்து தெரிவிக்க முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு பின் எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கப்பட வேண்டும்.

ஆனால் முறைப்படி முதல்வர், மூத்த அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்த பின்னர் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்படவில்லை.

இதை பார்த்த, மு.க.ஸ்டாலின் ஆளுநரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் தனது அதிருப்தியை தெரிவித்தார். அப்போது அவர் மு.க.ஸ்டாலினிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு, ஸ்டாலினை அழைக்குமாறு அறிவிப்பாளரிடம் சொல்வதற்காகச் சென்றார்.

ஆனால் அதை எதிர்பார்க்காமல் மு.க.ஸ்டாலின் மேடையில் ஏறி ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து சொன்னார். பின்னர் ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியின் தேநீர் விருந்தில் பங்கேற்காமல் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ”ஆளுநர் பதவி ஏற்ற பின்னர் முதலமைச்சர், அமைச்சர்கள் வாழ்த்து சொன்னார்கள் அதன் பின்னர் மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற முறையில் நான் சென்றேன். ஆனால் ஓர் அதிகாரி என்னை தடுத்து நீதிபதிகள் வாழ்த்து சொன்ன பிறகு நீங்கள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்றார். அப்படிப் பார்த்தால் அமைச்சர்களும் நீதிபதிகள் வாழ்த்துச் சொன்ன பிறகே வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும் அதுதான் மரபாக இருக்கும் என்றேன். ஆனால் அமைச்சர்கள் வாழ்த்து சொன்ன பிறகு என்னை ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்டேன்” என்று தெரிவித்தார்.