பிரபுதேவா திறந்து வைத்த மைக்கேல் ஜாக்சன் பளிங்குச்சிலை!

பாப் இசை உலகின் முடிசூடா சக்ரவர்த்தி, அதிக கிராமி விருதுகளை வென்ற அசாத்திய கலைஞன், நடனத் திறமையால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்டவன், மண்ணைவிட்டு மறைந்தாலும், உலக இசை ரசிகர்களின் மனதைவிட்டு மறையாத மாயவித்தைக்காரன் மைக்கேல் ஜாக்சன்.

மைக்கேல் ஜாக்சனின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவர் தான் சென்னையில் இயங்கிவரும் ஆர்.சி.கோல்டன் கிரானைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சந்திரசேகரன். காலத்தை வென்ற கலைஞனுக்கு காலத்தால் அழிக்க முடியாத மரியாதை செய்ய வேண்டும் என்ற சந்திரசேகரனின் கனவு தான், இன்று பளிங்குக் கல்லில் நிமிர்ந்து நிற்கும் மைக்கேல் ஜாக்சன் சிலை உருவாக காரணம்..

மூன்றரை டன் எடையில், 10 அடி உயரத்தில், ஐந்தரை அடி அகலத்தில் அதிபிரமாண்டமாய் கருப்பு கிரானைட் கற்களில் உருவாகியுள்ளது மைக்கேல் ஜாக்சனின் சிலை. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கனகபுரா என்ற ஊரில் உள்ள சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட கருப்பு கிரானைட் கல்லை, காஞ்சிபுரத்தில் வைத்து 45 நாட்கள் கைவினைக் கலைஞர்கள் பார்த்து பார்த்து ஜாக்சனின் சிலையை செதுக்கியுள்ளனர்.

12 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைக்கேல் ஜாக்சன் சிலை, பார்ப்பவர் கண்களை விரியச் செய்கிறது. அமெரிக்காவில் பிறந்த கலைஞனுக்கு உன்னத ரசிகனின் அன்பு அடையாளம் என பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் உருவாகி உள்ளது இந்த சிலை.

இப்படிப்பட்ட பிரமாண்ட சிலையை ஆர்.சி.கோல்டன் கிரானைட் நிறுவனத்தினர் சென்னை பல்லாவரத்தில் இயங்கிவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷூக்கு வழங்கியுள்ளனர். வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் வேல்ஸ் பிலிம் கிராப்ட் என்ற இரண்டு நாள் கருத்தரங்கில் இந்த சிலை பல்கலை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷூம் இந்த சிலையை திறந்து வைத்தனர். மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இதற்கான வண்ணமிகு விழாவில் கலந்துகொண்டனர்.

Read previous post:
0a1h
தமிழர்கள் எதிர்ப்பு: ஏ.ஆர்.ரஹ்மான் கொழும்பு இசை நிகழ்ச்சி ரத்து!

வருகிற 23ஆம் தேதி 14 இசைக் கலைஞர்களுடன் இலங்கை தலைநகர் கொழும்பில் இசை நிகழ்ச்சி நடத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டிருந்தார். தமிழ் அமைப்புகள் அதற்கு கடும் எதிர்ப்பு

Close