மெர்க்குரி – விமர்சனம்

ஸ்டோரி லைன் என்று பார்த்தால், வழக்கமான பேய் படத்துக்கான ஸ்டோரி லைன் தான். தன் மரணத்துக்கு காரணமானவர்களை, மரணித்த நபரின் ஆவி கொடூரமாக பழி வாங்குவது தான் கதை.

வித்தியாசம் என்னவென்றால், மரணத்துக்கு காரணமானவர்கள் வாய் பேசாத, காது கேளாத குறைபாடுகள் கொண்டவர்கள். ஆனால், கண் பார்வை உள்ளவர்கள். மரணித்த நபரோ கண் பார்வை இல்லாத, வாய் பேச இயலாத குறைபாடுகள் கொண்டவர். ஆனால், காது கேட்கக் கூடியவர். ஆகவே, அவர் இறந்த பிறகு அவரது ஆவியும் கண் பார்வை இல்லாத, வாய் பேச இயலாத, காது மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கிறது.

(“இந்த வித்தியாசமான சமாச்சாரம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் சொந்த சரக்கு அல்ல; ஹாலிவுட்டில் இருந்து களவாடிய சரக்கு” என்கிறார்கள் விஷ்யம் அறிந்தவர்கள்.)

சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகிய ஐவரும் நண்பர்கள். ஒரே வீட்டில் வசிப்பவர்கள். காது கேட்காத, வாய் பேச முடியாத குறைபாடுகள் கொண்டவர்கள். சைகையால் மட்டும் தங்கள் உணர்வுகளை, எண்ணங்களை பரிமாறிக் கொள்பவர்கள்.

இந்துஜாவை ரகசியமாக காதலிக்கும் சனந்த், இந்துஜாவின் பிறந்தநாளன்று தன் காதலைத் தெரிவிக்க முடிவு செய்கிறார். இதற்காக இந்துஜாவை காரில் அழைத்துச் செல்கிறார். அவர்களுடன் மற்ற மூன்று நண்பர்களும் சேர்ந்துகொள்ள காரில் இரவில் பயணிக்கிறார்கள். ஓரிடத்தில் காரை நிறுத்தி, தன் காதலைச் சொல்கிறார் சனந்த். அதை இந்துஜாவும் ஏற்றுக்கொள்கிறார்..

மகிழ்ச்சியாக காரில் தொடர்ந்து பயணிக்கும்போது, சனந்த் செய்யும் சில சேட்டைகளால் எதிர்பாராத வகையில் ஒரு விபத்து நேருகிறது. விளைவாக ஓர் இளைஞர் ரத்தக் காயங்களுடன் பிணமாகக் கிடக்கிறார். அவர் பிரபு தேவா.

பதறிப்போகும் நண்பர்கள், பிரபுதேவாவின் பிணத்தைத் தூக்கிச் சென்று ரகசியமாக மறைத்து வைத்துவிட்டுச் செல்கிறார்கள். பின்னர் மீண்டும் வந்து பார்க்கும்போது, பிரபுதேவாவின் பிணம் மாயமாய் மறைந்திருக்கிறது. உடன் வந்த இந்துஜாவும் காணாமல் போய்விடுகிறார்.

இந்துஜாவைத் தேடி வரும் நண்பர்கள், கைவிடப்பட்ட ராட்சத ஆலைக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கே கண் பார்வை இல்லாத, வாய் பேச இயலாத, காது மட்டும் கேட்கக் கூடிய பிரபுதேவா பேயாக இருக்கிறார். கொலை வெறியுடன் அலையும் அந்த பேயிடம் சிக்கி நண்பர்கள் படும்பாடு தான் மீதிக்கதை.

பிரபுதேவாவுக்கு உண்மையிலேயே இதில் வித்தியாசமான கதாபாத்திரம். மிரட்டியிருக்கிறார். நண்பர்களாக வரும் சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகியோரும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

திருவின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது.. சந்தோஷ் நாராயணனின் இசையும், குணால் ராஜனின் ஒலிக்கலவையும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன.

வழக்கமான பேய் கதையை வித்தியாசமான பாத்திரப் படைப்புகளைக் கொண்டு, திகிலாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவம் தந்ததற்காக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை பாராட்டலாம். ஆனால், ‘மௌனப்படம்’ என்று பீற்றிவிட்டு, வசனங்களை சப்-டைட்டிலாக போட்டது அபத்தம். பேயால் கடத்திச் செல்லப்பட்ட இந்துஜா, கொல்லப்படாமல், மூன்று நண்பர்கள் கொல்லப்பட்ட பிறகு கிளைமாக்ஸில் ஹாயாக நடந்துவருவது அமெச்சூர்த்னம்.

ஐந்து நண்பர்களும், பிரபுதேவாவும் சிறுவயதில் பாதரச ஆலைக் கழிவால் பாதிக்கப்பட்டு மாற்றுத் திறனாளி ஆனவர்கள்; பாதரச கழிவுக்கு பலியான 82 பேரின் நினைவிடம் அருகே சனந்த் தன் காதலை இந்துஜாவிடம் சொல்கிறார்; கைவிடப்பட்ட பாதரச ஆலைக்குள் நண்பர்களை பழி தீர்க்கிறது பேய்; படம் முடிந்து ஸ்க்ரோலிங்கில் டைட்டில் ஓடும்போது, ரசாயன ஆலைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய சில செய்தித்துணுக்குகள் காட்டப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுவரும் ஆபத்துகள் பற்றி இப்படி மேலோட்டமாக சொல்லியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.

‘மெர்க்குரி’ – பேய்க்கதை பிரியர்களுக்கு பிடிக்கும்!