“11 பெண்களை அடிக்க 1000 ஆண்கள் துரத்தி வந்தது அசிங்கம்!”

சபரி மலைக்கு சென்ற பெண்களில் ஒருவரான திலகவதி ஆகிய நான், எங்களைப் பற்றிய அவதூறுகளுக்கு பதில் சொல்கிறேன்.

வணக்கம்,

இது என்னுடைய நண்பர்களுக்காகவும், நலன் விரும்பிகளுக்காவும் திலகவதியாகிய நான் எழுதிக்கொள்வது. எந்த ஒரு மத நம்பிக்கையையும், பக்தர்களின் நம்பிக்கையையும் புண்படுத்த நான் சபரிமலை செல்லவில்லை. பெண்களின் உரிமைகளுக்காக மனிதி அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சபரி மலையில் ஐயப்பனை வழிபட பெண்களுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தவும் பெண் பக்தர்களை உள்ளே அனுமதிக்கவும் தான் நாங்கள் ஐயப்ப பெண் பக்தர்களுடன் சென்றோம்.

மொத்தம் 6 பெண்கள் ஐயப்ப பக்தர்கள். அவர்கள் முறையாக விரதமிருந்து இருமுடி கட்டி மாலையிட்டு ஐயப்பனை வழிபட வந்தவர்கள். நாங்கள் 5 பேர் ஆதரவாளர்களாக மட்டுமே உடன் சென்றோம். போலீஸிடமும், மீடியாவிடமும் அந்த 6 பேரை மட்டும் சபரி மலைக்கு அழைத்து சென்றால் போதும். நாங்கள் ஆதரவாக அவர்களுடன் ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டும் வந்து நீங்கள் சொல்லும் இடத்தில் நின்று விடுகிறோம், மற்றபடி நாங்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல, இருமுடி கட்டாமல் மாலை போடாமல் ஐயப்பனை தரிசிக்க நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டு தான் துவங்கினோம்.

எனவே ஐயப்ப பக்தர் என்று எந்த இடத்திலும் நான் என்னை சொல்லிக்கொள்ளவில்லை. அப்படி பொய் சொல்லவும் எனக்கு அவசியமில்லை.

பெண் ஐயப்ப பக்தர்களுக்கு எந்த வித பிரச்சனையும் வரக்கூடாது என்பதால் கருப்பு உடை அணிந்திருந்தோம். அதோடு பொட்டு வைத்திருக்கும்போதே என்னை இஸ்லாமிய பெண் என்று பரப்பி வருகிறார்கள். தேவை இல்லாத மதப் பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இதனை சொல்கிறேன் பிறப்பின் அடிப்படையில் நான் ஒரு இந்து பெண். தேவை இல்லாமல் மற்ற மதத்தினை இதிலிழுத்து மதப் பிரச்சனைகள் தூண்டாதீர்கள்.

இதனை Publicity-காக செய்தோம் என்பர்வர்களுக்கு, சபரி மலைக்கு செல்வது மிகவும் பிரச்சனைக்குரிய ஒன்று என்பது தெரியும். இருந்தும் ஐயப்ப பெண் பக்தர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்கான நோக்கத்தோடு மட்டுமே நாங்கள் பயணம் மேற்கொண்டோம். உயிரை பணயம் வைத்து Publicity செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

ஏன் பயந்து ஓடுனீங்க? என்ற ரீதியில் நகைச்சுவையாகவும், நேரடியாகவும் பரப்புபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, ஆம் நாங்கள் நிச்சயமாக பயந்தோம் தான். 11 பெண்களை நோக்கி 1000 மேற்பட்ட ஆண்கள் ஓடிவரும்போது ஓடாமல் ஹீரோயிசம் செய்ய இது சினிமா அல்ல. பயந்து ஓடுவது தான் நிதர்சனம், விவேமும்.

எங்களை அப்படி ஓட வைக்க மீடியாவும் போலிசும் கையாண்ட உக்திகளையும் கூடிய விரைவில் அம்பலப்படுத்துகிறோம். எங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நாங்கள் தப்பித்துக்கொள்ள ஓடினோம் என்பது எங்களுக்கு அசிங்கம் அல்ல. 11 பெண்களை அடிக்க 1000 ஆண்கள் துரத்தி வந்தது தான் அசிங்கம். எது அவமானம், அசிங்கம் என்பதை புரியாமல் உளறி நேரத்தை வீணடிக்காதீர்கள்.

மற்றபடி, என்னை உடல் சார்ந்து ஒழுக்க ரீதியாக (Character Assault) தாக்குவது, Memes போடுவது என்னைதுளி அளவும் பாதிக்காது. தங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள். இதுபோன்று பல அச்சுறுத்தல்களை கடந்து தான் பொது தளத்தில் உள்ளேன். என் முக நூல் பக்கத்திலிருந்து என்னோடு சேர்த்து என்னுடைய நண்பர்கள் மற்றும் பல பெண்களின் புகைப்படமும் தவறான முறையில் பரப்பப்படும் ஒரே காரணதிற்காக என்னுடைய முகநூலை மட்டும் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளேன்.

என்னுடைய பாதுகாப்பில் அக்கறை கொண்டு விசாரித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றியும் அன்பும்.

பெண்களை சக உயிரியாக மதியுங்கள். சபரிமலையை மூட வேண்டும் என்றோ, ஐயப்பனை யாரும் வழிபட வேண்டாம் என்றோ சொல்வதற்கு நாங்கள் சபரி மலை செல்லவில்லை, பெண் ஐயப்ப பக்தர்களுக்கு வழிபாட்டு உரிமை வேண்டும் என்பதற்காகவே சென்றோம். பக்தர்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் பெண்கள் மேல் ஏன் பாரபட்டசம் என்ற கேள்வி எழுப்பி சென்றோம்.

கலாச்சாரம் பாரம்பரியம் என்பீர்களானால், கணவன் இறந்தவுடன் நெருப்பில் குதித்து சாக வேண்டும் எனும் “சதி என்ற உடன் கட்டை “ஏறும் வழக்கமும், தேவ தாசி முறையும், குழந்தை திருமணமும் கூட தான் கலாச்சார பழக்கவழக்கமாக இருந்தது. அதன் அபதத்தை உணர்ந்து சட்ட ரீதியாக அவற்றை நாம் தடை செய்ய வில்லையா. அதே போல் தான் மாதவிடாய் தீட்டு என்ற ஒற்றை காரணத்திற்காய் பெண் பக்தர்களை அனுமதிக்க கூடாது என்பதும் ஐயப்ப பக்தர்களால் யோசிக்கப்பட வேண்டிய ஒன்று.

மீடியாவிலும் சோசியல் மீடியாவிலும் பல பொய் குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றது. Press Meet மூலம் உண்மைகளையும் எங்கள் தரப்பு நியாங்களையும் சொல்கிறோம்.

முன்பை விட அதிகமான மனவலிமையுடன் உள்ளேன் என்று என்மீது அக்கறை உள்ளவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இது என் தரப்பில் இருந்து வரும் செய்தி மட்டுமே. இதன் மீது உங்களது விவாததிற்கும் விமர்சனத்திற்கும் தற்போது நான் பதிலளிக்க விரும்பவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு நடந்தது அனைத்தையும் தெரியப்படுத்தியவுடன் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன்.

நன்றி,

திலகவதி

*

via tholar Paa. Jeevasundary

*

(Shared from Yamuna Rajendran)