“மணிரத்னம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்”: உண்மையை போட்டுடைத்த சுஹாசினி!

“பிரபல இயக்குனர் மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனவர்”. இப்படித்தான் சொல்லப்பட்டது. சொல்லப்படுகிறது. “ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய “பல்லவி அனுபல்லவி” படத்தினை இயக்கினார்” என்பது தான் மணிரத்னம் பற்றிய ‘விக்கிப்பீடியா தகவலும் கூட.

ஆனால், இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது. பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்துலுவின் மகன் ரவி பந்துலுவின் கன்னட படத்தில் மணிரத்னம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன்பின்னர் தான் 1983ஆம் ஆண்டு வெளிவந்த தன் முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னட படத்தை அவர் இயக்கியிருக்கிறார். இந்த தகவலை மணிரத்னம் மனைவி சுஹாசினி தெரிவித்துள்ளார்.

a12

பி.ஆர்.பந்த்லுவின் மகள் பி.ஆர்.விஜய்லட்சுமி இயக்கியுள்ள ‘அபியும் அனுவும்’ என்ற படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு சுஹாசினி பேசுகையில், “யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை நான் கூற வேண்டும். மணிரத்னம் யாரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை என்று தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பி.ஆர்.வரலட்சுமியின் அண்ணன் (பி.ஆர்.பந்துலுவின் மகன்) ரவி பந்துலுவின் கன்னட படத்தில் மணிரத்னம் வேலை செய்திருக்கிறார். அதை இங்கு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.

எனில், “யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியதில்லை” என்ற தவறான தகவலை மணிரத்னம் ஏன் பரப்பினார்? “நூறு வருடங்களுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு உண்மை தெரியவா போகிறது? பொய் வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று அவர் நினைத்திருப்பாரோ…?.