”சிம்புவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்!” – ‘மாநாடு’ தயாரிப்பாளர்

சிம்பு நடித்த ’மாநாடு’ படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று (21-12-2021) சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

5

சிம்பு பங்கேற்காத இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பக்கபலமாக இருந்தவர்கள் உத்தம்சிங் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இருவரும் தான்.. இந்த படம் தொடங்கிய சமயத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அந்த கருத்து வேறுபாடுகள் எல்லாமே படத்திற்காக தானே தவிர, எங்களுக்குள் பர்சனலாக எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. சிம்புவுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவரை நான் எப்போதும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

அதேபோல இந்த படத்தின் கதையைக் கேட்டதுமே, எஸ் ஜே சூர்யா இந்த படம் ஹிந்தியில் கூட நல்ல விலைக்குப் போகும்.. அதனால் எனக்கு சம்பளம் தவிர எக்ஸ்ட்ராவாக லாபத்தில் கொஞ்சம் சதவீதம் கொடுங்கள் என தமாஷாக கூறினார். அந்த அளவுக்கு இந்த படத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார்..

யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தை தாங்கி பிடித்தது. இளையராஜா சாருக்கு இசைஞானி என பெயர் வைத்துவிட்டு, இவருக்குத்தான் இளையராஜா என பெயர் வைத்திருக்க வேண்டும்.. இந்த படம் தாமதமானாலும் எல்லாமே பாசிட்டிவாக தான் அமைந்தது” என்று கூறினார்.