லவ் – விமர்சனம்

நடிப்பு: பரத், வாணி போஜன், ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், சுவயம் சித்தா

இயக்கம்: ஆர்.பி.பாலா

ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா

படத்தொகுப்பு: அஜய் மனோஜ்

இசை: ரோனி ரஃபேல்

தயாரிப்பு: ‘ஆர் பி பிலிம்ஸ்’ ஆர்.பி.பாலா

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

2020ஆம் ஆண்டு காலித் ரஹ்மான் இயக்கத்தில், ஷைன் டாம் சாக்கோ – ரஜிஷா விஜயன் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘லவ்’. சைக்கலாஜிக்கல் சஸ்பென்ஸ் திரில்லர் ரக பிளாக் காமெடிப்படமான இந்த ‘லவ்’, இப்போது அதே தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகி திரைக்கு வந்திருக்கிறது. இந்த தமிழ் ரீமேக்கில் ஷைன் டாம் சாக்கோவுக்குப் பதிலாக பரத்தும், ரஜிஷா விஜயனுக்குப் பதிலாக வாணி போஜனும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் காலித் ரஹ்மானுக்குப் பதிலாக ஆர்.பி.பாலா இயக்கியிருக்கிறார்.

படத்தின் தலைப்பு தான் ‘லவ்’. ஆனால் இது காதல் கதை அல்ல. திருமணத்துக்குப் பின் தம்பதிகளுக்குள் காதல் இல்லாமல் போனால் எத்தகைய விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதைச் சொல்லும் கதை!

செல்வவளம் மிக்க பெரிய தொழிலதிபரான ராதாரவியின் மகள் வாணி போஜன். சொந்தத் தொழில் செய்து, நஷ்டப்பட்டு, வேறு தொழில் / வேலை இல்லாமல், குடியும், வீடியோ கேமுமாய் பொழுதைக் கழிப்பவர் பரத். இவர்கள் இருவரும் கணவன் – மனைவி.

திருமணமான ஓராண்டிலேயே பரத் – வாணி தம்பதி இடையே அடிக்கடி சச்சரவு ஏற்கிறது. அப்படியொரு சச்சரவின்போது, பரத் ஆத்திரத்தில் வாணி போஜனைப் பிடித்து வேகமாகத் தள்ளிவிட, வாணி போஜன் தலையில் அடிபட்டு, ரத்தம் கொட்டி, இறந்துபோகிறார்.

மனைவியைக் கொன்றுவிட்ட அதிர்ச்சியில் பரத் செய்வதறியாது உறைந்து நிற்கையில், காலிங் பெல் ஒலிக்கிறது. உடனே மனைவியின் சடலத்தை இழுத்துச் சென்று பாத்ரூமில் மறைத்து வைத்துவிட்டு வந்து பதட்டத்துடன் கதவைத் திறக்கிறார். அங்கே பரத்தின் நண்பர் விவேக் பிரசன்னா நின்றுகொண்டிருக்கிறார். வீட்டுக்குள் வரும் விவேக் பிரசன்னா, தன் மனைவியும், நண்பனும் சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர்களை பழி வாங்குவதற்காக தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் புலம்பிக்கொண்டே மது அருந்துகிறார். மனைவியைக் கொன்று மறைத்து வைத்திருக்கும் பதட்டத்தில் இருக்கும் பரத், எப்படியாவது நண்பரை வெளியே அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், “போய் உன் மனைவியிடம் சமாதானமாகப் பேசி பிரச்சனையைத் தீர்த்துக்கொள் என்று அறிவுரை கூறுகிறார். ஆனால், விவேக் பிரசன்னா குடிபோதையில் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, அங்கிருந்து நகருவதாக இல்லை.

மீண்டும் காலிங் பெல் ஒலிக்க, இப்போது பரத்தின் இன்னொரு நண்பரான டேனியல் ஆனி போப், தனது கள்ளக்காதலியுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் திட்டத்துடன் அவரை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். “ஒரு அரை மணி நேரம் நாங்கள் தனியாகப் பேச வேண்டும்” என்று சொல்லி கள்ளக்காதலியுடன் படுக்கையறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொள்கிறார். அவர்களது கண்ணில் மனைவியின் சடலம் பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களை வெளியே அனுப்ப முயலுகிறார் பரத். பலன் இல்லை. இந்நிலையில், டேனியல் தனது கள்ளக்காதலியுடன் இருக்கிறார் என தெரிந்து, அவரது மனைவி போன் பண்ணி சண்டை போட, ”அதெல்லாம் இல்லை” என்று காட்டிக் கொள்வதற்காக டேனியல் கள்ளக்காதலி பற்றி மனைவியிடம் தரக்குறைவாகப் பொய்யாக பேச, இதை கேட்டுக்கொண்டிருக்கும் கள்ளக்காதலி டேனியலுடன் சண்டை போட்டுவிட்டு பரத்தின் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். ஆனால் டேனியலோ மனைவிக்கு பயந்து தன் வீட்டுக்குச் செல்ல மறுத்து அங்கேயே இருக்கிறார்.

இந்நிலையில், பரத்  எதற்காக பயந்தாரோ, எதற்காக நண்பர்களை அவசரமாக வீட்டைவிட்டு வெளியேற்ற முயன்றாரோ, அது நடந்தே விடுகிறது. ஆம், மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது மனைவி வாணி போஜனின் சடலத்தை நண்பர்கள் பார்த்து விடுகிறார்கள். அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர் பரத்துக்காக பரிதாபப்பட்டு, சடலத்தை எப்படி ரகசியமாக அப்புறப்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கிறார்கள்.

இப்போது மீண்டும் காலிங் பெல் ஒலிக்கிறது. கதவை திறந்து பார்க்கும் பரத்துக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே பரத்தின் மனைவி வாணி போஜன் உயிருடன் நின்றுகொண்டிருக்கிறார்…!

எனில், உண்மையில் என்ன தான் நடந்தது? வாணி போஜன் கொல்லப்பட்டாரா, இல்லையா? நண்பர்களான விவேக் பிரசன்னாவும், டேனியலும் பரத் வீட்டுக்கு வந்தார்களா, இல்லையா? பரத் என்ன ஆனார்? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘லவ்’ படத்தின் மீதிக்கதை.

பரத்தும், வாணி போஜனும் கணவன் – மனைவியாக இயல்பாக நடித்திருக்கிறார்கள். இருவரும் நிஜமாகவே அடித்துக்கொள்வது போல் ஆக்ரோஷமாக சண்டை போடுவது தத்ரூபமாக இருக்கிறது. எனினும், படத்தின் பெரும்பகுதியில் வாணி போஜன் சடலமாகக் கிடப்பதும், பரத் செய்வதறியாது வீட்டுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும் சலிப்பை ஏற்படுத்துகிறது.

பரத்தின் நண்பர்களாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னாவும், டேனியல் ஆனி போப்பும் தங்கள் வருகை மூலம் கதையில் டென்ஷனை உருவாக்குவதோடு, அவ்வப்போது பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறார்கள்.

ராதாரவி மற்றும் ஸ்வயம் சித்தா தலா ஒரு காட்சியில் மட்டுமே வந்து போகிறார்கள்.

முதல் நான்கு காட்சிகளைத் தவிர ஏனைய அனைத்துக் காட்சிகளும் ஓர் அடுக்கு மாடி குடியிருப்பின் ஃப்ளாட் ஒன்றுக்குள்ளேயே நடப்பதாலும், வெறும் ஆறு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து கதை சொல்ல வேண்டிய நிர்பந்தம் இருப்பதாலும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்வது இயக்குனருக்கு சவாலான பணி. இந்த சவாலை இயக்குனர் ஆர்.பி.பாலா ஓரளவு சமாளித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் அனுபவ ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. ரோனி ரஃபேலின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓ.கே ரகம்.

‘லவ்’ – சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்!