லிப்ட் – விமர்சனம்

நடிப்பு: கவின், அம்ரிதா, பாலாஜி வேணுகோபால்

இயக்கம்: வினீத் வரபிரசாத்

இசை: பிரிட்டோ மைக்கேல்

ஒளிப்பதிவு: யுவா குமார்

வெளியீடு: டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி

பேய்ப்படம் பார்க்கவரும் பார்வையாளர்கள்,”எங்கே, எங்களை பயமுறுத்து… பார்ப்போம்” என்று சவால்விடும் விதமாகத் தான் திரையரங்குக்குள் வந்து அமருவார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு அச்சவுணர்வைத் தூண்டி திகிலூட்ட முடிந்தால் அந்த பேய்ப்படம் ஒரு வெற்றிப்படம்; இல்லையேல் அது தோல்விப்படம். அந்த வகையில் ‘லிப்ட்’ வெற்றிப்படமா? பார்ப்போம்.

தகவல் தொழில்நுட்பப் பெருநிறுவனம் ஒன்றின் ஊழியரான நாயகன் குரு (கவின்) பெங்களூர் அலுவலகத்திலிருந்து சென்னை கிளைக்கு டீம் லீடராக மாற்றலாகி வருகிறான். சென்னையில் பலமாடிக் கட்டிடத்தில் இருக்கும் அந்த அலுவலகத்தில் மனிதவள (ஹெச்.ஆர்) பிரிவில் வேலை பார்க்கும் நாயகி ஹரிணி (அம்ரிதா) முதல்நாளே குரு மீது ஈர்ப்பு கொள்கிறாள்.

0a1m

அன்று இரவு அலுவலகத்தில் குரு ஒத்தையில் அமர்ந்து வெகுநேரம் வேலை பார்த்துவிட்டு புறப்படுவதற்காக லிப்டில் ஏறுகிறான். ஆனால், லிப்டில் அச்சமூட்டும்  பல அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கத் தொடங்குகின்றன.

லிப்டை விட்டு வெளியேறி படி வழியாக இறங்க முயலுகிறான். முடியவில்லை. மீண்டும் மீண்டும் ஒரே தளத்திற்கு வந்து சேருகிறான். அவனைப் போலவே நாயகி ஹரிணியும் வெளியேற முடியாமல் அதே தளத்தில் சிக்கியிருக்கிறாள். இருவரும் சேர்ந்து அந்தக் கட்டடத்தை விட்டு வெளியேற எவ்வளவோ முயல்கிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

அங்கிருந்த இரண்டு செக்யூரிட்டிகள் திடீரென மர்மமான முறையில் ஒருவர்பின் ஒருவராக  இறக்கிறார்கள்.

அந்த இடத்தில் எத்தனை பேய்கள்  இருக்கின்றன? நாயகனையும், நாயகியையும் வெளியே போகவிடாமல் அவை ஏன் தடுக்கின்றன? இருவரும் தப்பினார்களா, அழிந்தார்களா? என்பது மீதிக் கதை.

ஒரே அலுவலகத்தில் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மிக மெதுவாக நகரும் படம், பிறகு அடுக்கடுக்காக திகிலூட்டியபடி வேகமெடுக்கிறது.

அமானுஷ்யமான அந்த கட்டிடத்தில் இருந்து நாயகன் தப்பிக்க முயல்வது, எதிர்பாராத விதமாக நாயகியும் மாட்டியிருப்பது, கண்ணுக்குத் தெரியாத உருவங்கள் துரத்துவது, அங்கு பேய் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள “சார்லி… சார்லி… ஆர் யூ தேர்? சார்லி… சார்லி… இருக்கீங்களா?” என நாயகி நடுங்கும் குரலில் கேட்பது என நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு பேய்ப்படம் மெய்யாகவே பயமுறுத்தி, திகிலூட்டி, வெற்றி பெற்றிருக்கிறது.

நாயகன் கவின், ஸ்மார்ட்டான ஐடி ஊழியர் கதாபாத்திரத்திற்கு கசித்தமாக பொருந்தி இருக்கிறார். கோபம், பயம், கொஞ்சம் நகைச்சுவை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகி அம்ரிதா அழகிலும் சரி, நடிப்பிலும் சரி திறம்பட நடித்து கவர்ந்திருக்கிறார்.

ஐடி ஊழியர்களுக்கு உள்ள வேலைப் பளு, அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், இதனால் அவர்களுக்கு ஏற்படும் விபரீதங்கள் என அனைத்தையும் ஒரு பேய்க்கதைக்குள் அடக்கி, சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக இயக்கி பாராட்டு பெறுகிறார் அறிமுக இயக்குனர் வினீத் வரப்பிரசாத், படத்தின் நீளத்தையும், கூறியது கூறலையும் குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

படத்தில் ஒரே பாடல் தான். அதையும் படத்தின்  இறுதியில் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். படம் முழுக்க பின்னணி இசை மூலமே பயமுறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல். யுவ குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்..

‘லிப்ட்’ – பயங்கர திகில்!