‘நாக் ஸ்டூடியோஸ்’ மூலம் சினிமா துறையில் நுழைகிறது என்ஏசி ஜூவல்லர்ஸ்!

தென்னிந்திய அளவில் ஆபரணத் துறையில் மிகவும் பாரம்பரியம் மிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் தற்போது சினிமா துறையில் அடி எடுத்து வைத்துள்ளது. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 15000 சதுர அடி பரப்பளவில் ‘நாக் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய ஒரு நவீன ஸ்டுடியோவை வடிவமைத்திருக்கிறது.  அதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நல்லி குப்புசாமி, நடிகர் சிவகுமார், சூரியா, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கலைப்புலி எஸ்.தாணு, ராஜசேகர் பாண்டியன், இயக்குனர்கள் பிரியதர்ஷன், ஐ.வி.சசி, ஞான ராஜசேகரன், விக்னேஷ் சிவன், ரவி ராகவேந்திரா, ஷோபா சந்திரசேகரன், லக்‌ஷ்மி சிவகுமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

விழாவில் ‘நாக் ஸ்டுடியோஸ்’ லோகோவை நடிகர் சூர்யா வெளியிட, சவுண்ட் ஸ்டுடியோவை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும், வீடியோ பிரிவை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் தொடங்கி வைத்தனர்.

விழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய நாக் ஸ்டுடியோவின் நிறுவனர் ஆனந்த பத்மநாபன், “இங்கு திரையுலகின் முக்கியமான ஜாம்பவான்கள் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கடையில் வாடிக்கையாளர் முன்பு எவ்வளவு பெரிய நடிகர்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த வகையில் நான் நடிகனாக இருந்தேன். என் மகன் நடிகர்களோடே தொடர்பில் இருந்தான். மயிலாப்பூர் மாதிரி படித்தவர்கள் அதிகம் வாழும் இடத்தில் கடையை திறம்பட நடத்துவது மிகவும் கடினம். அதை செய்து காட்டினோம். அதன் பிறகு நிறைய கிளைகளை ஆரம்பித்தோம். ஒரே நேரத்தில் மூன்று கடைகளை திறப்பேன் என்று என் மகனிடம் சொன்னேன். காஞ்சிபுரம், பெரம்பூர், வேளச்சேரி என மூன்று கடைகளை ஒரே நாளில் திறந்தோம். தன்னம்பிக்கை தான் அதை சாத்தியப்பட வைத்தது. என் மகன் ஸ்டைலோரி என்ற ஃபேஷன் ஸ்டோரை ஆரம்பித்தான். அதுவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. தொழிலில் பல நுணுக்கங்களை கையாண்டு தான் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறோம். அதுபோலவே குறைந்த பட்ஜெட்டில் நல்ல லாபத்தை கொடுப்போம்” என்றார்.

நாக் ஸ்டூடியோஸ் உரிமையாளர் ஆனந்த ராமனுஜம் பேசும்போது, “தி.நகர் கிளையை ஆரம்பிக்கும் முழுப்பொறுப்பையும் அப்பா என்னிடம் ஒப்படைத்தார். அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தினேன். அதை தொடர்ந்து நாக் ஸ்டுடியோஸ் ஆரம்பிக்கும் எண்ணத்தை சொன்னவுடன் மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக சம்மதித்தார். ஆபரண துறையில் என்ன தரத்தை கொடுத்தோமோ, அதை சினிமா துறையிலும்  கொடுப்போம். நாக் ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட் ஹரிஷ் வந்த பிறகு நிறைய மாற்றங்கள் என் வாழ்க்கையில் வந்தன. ஆடியோகிராஃபர் ஸ்ரீதர் சாரின் மகன் வினய் தான் இந்த ஸ்டுடியோ ஆரம்பிக்க முக்கிய காரணம்” என்றார்.

“உதவி இயக்குனராக இருந்த நான் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு ஒவ்வொரு ஸ்டுடியோவுக்கும் ஹார்ட் டிஸ்க்கை தூக்கிக் கொண்டு அலைந்தேன். அப்போது ஒரே இடத்தில் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தேன். அதன்படி அமைந்த ஸ்டுடியோ தான் இந்த நாக் ஸ்டுடியோஸ். வாடிக்கையாளர் கண்ணோட்டத்தில், அவர்கள் விரும்பும் வகையில் ஸ்டுடியோவை அமைத்திருக்கிறோம்” என்றார் நாக் ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட் ஹரிஷ் ராம்.

நாக் ஸ்டுடியோஸ் சோனி மியூசிக் உடன் இணைந்து ‘தி மெட்ராஸ் கிக்’ என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளது. சுய இசைக்குழுக்களும், சுய இசையமைப்பாளர்களும் ‘மெட்ராஸ் கிக்’ மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். பல புதிய திறமைகளை கண்டறியும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘மெட்ராஸ் கிக்’ அமைப்பை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் மதன் கார்க்கி தொடங்கி வைத்தனர். சோனி மியூசிக் அஷோக் பர்வானி உடன் இருந்தார்.

அப்போது பேசிய இசையமைப்பாளர் அனிருத், “ஆனந்த் என்னுடைய கல்லூரி சீனியர். லாஸ் ஏஞ்சலஸ் போனபோது அங்கு நான் பார்த்த ஸ்டுடியோக்கள் தோட்டம், ஓய்வு எடுக்கும் அறைகள், புத்துணர்வளிக்கும் லௌஞ் ஆகியவையோடு அமைந்திருந்தன. ஒரு கலைஞனுக்கு தேவையான அம்சங்கள் அவை. அதே அம்சங்களோடு இந்த ஸ்டுடியோவை அமைத்திருக்கிறார்..இந்த ஸ்டூடியோ நிச்சயமாக மிக மிக நல்ல இடத்தை அடையும்” என்றார்.

விழாவில்  தயாரிப்பாளர்கள் சீனிவாசன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், இயக்குனர் சுந்தர்.சி ஆகியோரும் கலந்து கொண்டனர். ஜெகன் தொகுத்து வழங்கினார்.