’விருமாண்டி’ படத்தில் “கீழ்வெண்மணி” என்றவுடன் பேய்க்காமன் முகம் ஏன் மாறுகிறது?

‘மேடத்துக்கு தஞ்சாவூர்னு கேள்விப்பட்டேன்..’

‘ம்ம்…’

‘ப்ராப்பர் Tanjore ங்களா?’

‘ப்ராப்பர் இல்ல…கீழ்வெண்மணி’

‘விருமாண்டி’ திரைப்படத்தில் ஏஞ்சலா காத்தமுத்துவிற்கும் பேய்க்காமனுக்கும் நடக்கும் இந்த உரையாடலின் போதுதான் முதலில் கீழ்வெண்மணி என்கிற பெயரை கேள்விப்பட்டேன். அப்போதும், சில வருடங்கள் கழிச்சு அந்த படத்த மறுபடியும் பார்க்கும்போதும், கீழ்வெண்மணினு சொன்னதுக்கு ஏன் பேய்க்காமன் முகம் மாறுதுனு குழம்பியதுண்டு.

0a1bதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செழிப்பான கிராமம் கீழ்வெண்மணி. நிலக்கிழார் பண்ணை முறை இருந்துவந்த கிராமம். நிலத்தில் பாடுபட்டு உழைத்த தொழிலாளர்களுக்கு மிகமிக சொற்ப கூலியே கொடுக்கப்பட்டது. எதிர்த்து பேசுபவர்களுக்கு சாட்டையடி உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் தரப்பட்டன. விவசாயிகள் அடிமைகள் போல் நடத்தப்பட்டனர்.

இந்நிலையில் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள் விவசாயிகளை ஒன்றிணைத்து ‘தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்’ உருவாக்கினார்கள். அதன்மூலம் தொடர்ந்து உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்டு (அதுவும் வெறும் அரைப்படி நெல் கூலி உயர்வுகேட்டு) போராட்டங்கள் நடந்தன. இதற்கு போட்டியாக நிலக்கிழார்கள் ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ உருவாக்குகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாததோடு போராட்டங்களை ஒடுக்க ‘கிஷான் போலீஸ்’ என்றொரு கும்பலை உருவாக்கி சில படுகொலைகளையும் அரங்கேற்றுகிறார்கள்.

ஆனால் தொடர்ந்து போராட்டங்கள் வலுப்பெறுகின்றன. முக்கியமாக அடுத்தடுத்த ஊர்களுக்கு பரவுகின்றன. உஷாரான நிலக்கிழார்கள் ஒருகட்டத்தில் ‘சங்கத்தில் ஏற்றிவைக்கப்பட்டுள்ள செங்கொடியை இறக்கிவிட்டு சங்கத்தில் இருந்து விலகுங்கள். நீங்கள் கேட்டதை விட அதிக கூலியை தருகிறோம்’ என்கிறார்கள். ஆனால் ‘எங்கள் உயிரே போனாலும் செங்கொடியை இறக்கமாட்டோம்’ என்கிறார்கள் விவசாயிகள்.

அடிமைகள் தங்களை கேள்வி கேட்பதா என்ற கோபம், கீழ்சாதிக்காரன் என்னை எதிர்ப்பதா என்கிற சாதிஆணவம், ஆண்டை மனோபாவம் எல்லாம் சேர்ந்து கொலைவெறியை உண்டாக்குகிறது. 1968 டிசம்பர் 25 இதே கிறிஸ்த்மஸ் தினம். அரிவாள், கட்டைகளுடன் கீழ்வெண்மணி விவசாயிகள் குடியிருப்புகளில் புகுந்த வெறிகொண்ட கும்பல், விவசாயிகளையும் அவர்கள் குடும்பங்களையும் கொடூரமாக தாக்கத் துவங்கியது. உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் அங்கு வசித்து வந்த ‘ராமையா’ என்பவரின் சிறிய குடிசைக்குள் புகுந்து ஒளிந்துகொள்ள முயன்றனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 48 பேர் அந்த குடிசையில் தஞ்சம் புகுந்தனர். இதை பார்த்துவிட்ட அந்த ஆதிக்கசாதி கும்பல், குடிசையை வெளியிலிருந்து அடைத்துவிட்டு, குடிசைக்கு தீ வைத்தது. மரண ஓலத்துடன் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட மொத்தம் 44 பேர் எரிந்து கருகினார்கள்.

மொத்தம் 100 க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள். கோர்ட்டில் வழக்கு வந்தது. “அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…” என்றொரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை அளித்து அத்தனை பேரையும் விடுதலை செய்தது நீதிமன்றம். இதில் ஈடுபட்ட ஒருவர் கூட தண்டனை பெறவில்லை. (பின்னாட்களில் இதற்கு மூலகாரணமாய் கருதப்பட்ட கோபாலகிருஷ்ண நாயுடு கொலை செய்யப்பட்டார்)

செங்கொடியை இறக்க மறுத்து, உழைப்பிற்கேற்ற கூலிகேட்டு, ஆண்டைகளை எதிர்த்து நின்று, சாதிய வர்க்கப் போராட்டத்தில் உயிர் நீத்த அத்தனை பேரின் நினைவாகவும் அங்கே நினைவகம் அமைக்கப்பட்டு ‘கீழ்வெண்மணி தியாகிகள் தினம்’ வருடாவருடம் இந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது.

இதுதான் கீழ்வெண்மணி. திரைப்படத்தில் பேய்க்காமனின் முகம் ஏன் மாறுகிறது என்று பிறகு தெளிவாக புரிந்தது. இப்போதும் நிறைய பேய்க்காமன்கள் முகம் வேறுவேறு பெயரை சொன்னால் மாறுவதை பார்க்க முடிகிறது. இன்று கீழ்வெண்மணி தியாகிகள் தினம்.

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலிகள். அடிபணியாமல் தலையுயர போராடிய போராளிகளுக்கு செவ்வணக்கங்கள் !!

[இதுகுறித்த முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள இணையத்தில் உள்ள பல கட்டுரைகளையும் முக்கியமாக தோழர் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ‘ராமையாவின் குடிசை’ என்கிற அற்புதமான ஆவணப்படத்தையும் பாருங்கள் ]

JEYACHANDRA HASHMI