கதிராமங்கலம் மக்கள் மீது போலீஸ் அடக்குமுறை: பழ.நெடுமாறன் கண்டனம்!

கதிராமங்கலம் மக்களுக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. அமைத்துள்ள குழாய்களில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் எண்ணெய் கசிந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் பரவி நிலங்களைப் பாழடித்துள்ளது.

இதற்கு எதிராகப் போராடிய கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஓ.என்.ஜி.சி.யின் உயர் அதிகாரியான ராஜசேகரன் என்பவர் கதிராமங்கலம் மக்கள் பொய்யான குற்றச்சாட்டு கூறுவதாகக் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் செருகுவதைப் போன்றது மட்டுமல்ல, பொறுப்பற்றதுமாகும்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் உட்பட பலர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறேன். அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி வற்புறுத்துகிறேன்” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.