இதுவரை இல்லாத கெட்டப்பில் கார்த்தி கலக்கும் ‘காஷ்மோரா’ –முன்னோட்டம்

தீபாவளி வெளியீடாக இன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது  ‘காஷ்மோரா’. கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை கோகுல் இயக்கி இருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

செய்வினை வைப்பது, எடுப்பது போன்ற விஷயங்கள் அடங்கிய கதை தான் ‘காஷ்மோரா’. அவையெல்லாம் உண்மையா, இல்லையா என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படத்தின் ட்ரெய்லர் மிகவும் சீரியஸாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், படத்தில் சுமார் 60 சதவிகிதம் காமெடி இருக்கிறது என்கிறது படக்குழு. படத்தைப் பார்ப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக காமெடி இருக்குமாம்

இதுவரை கார்த்தி நடித்த படங்களின் கெட்டப் எதுவுமே இப்படத்தில் இடம்பெற கூடாது என்று தீர்மானித்திருக்கிறார்கள். இதனால் படத்தின் கதாபாத்திர கெட்டப்களை இறுதி செய்யவே நீண்ட நாட்கள் ஆகியிருக்கிறது. கார்த்திக்கு சுமார் 47 கெட்டப்களை போட்டுப் பார்த்து, இறுதியில் 3 கெட்டப்களை இறுதி செய்திருக்கிறார்கள்.

கார்த்தியின் அப்பாவாக வரும் விவேக்கின் கதாபாத்திரம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்கிறார்கள். விவேக் பயப்படும் காட்சிகள், ரசிகர்களை சிரிக்க வைக்கும் என்கிறது படக்குழு.

இப்படத்தின் கதையைக் கேட்டவுடன், சிறு கதாபாத்திரம் என்றாலும், அரசி கதாபாத்திரத்தில் இதுவரை நடித்ததில்லை, புதுமையாக இருக்கும் என்று சொல்லி நடித்துக் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. அவருடைய காட்சிகள் படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறது.

0a1a

படப்பிடிப்பு நாட்கள் குறைவு தான் என்றாலும், அரங்குகள் அமைக்கும் பணிக்கு மட்டும் நீண்ட காலம் ஆகியிருக்கிறது. இப்படத்துக்காக மட்டும் 19 அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். தயாரிப்பாளரின் நண்பரின் இடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்குதான் ஒவ்வொரு அரங்காக அமைத்துப் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். வழக்கமாக படப்பிடிப்பு நடத்தும் இடம் என்றால் புகைப்படங்கள் கசிந்துவிடும் என்பதால் முன்பே திட்டமிட்டு இப்படி நடத்தியிருக்கிறார்கள். தினமும் சுமார் 200 பணியாளர்கள் இதற்காகப் பணியாற்றியிருக்கிறார்கள்.

பில்லி – சூனியம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். காமெடி கலந்த தனது கதாபாத்திரம், தனக்கு புதுமையானதாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தாலும் காதல் காட்சிகளே கிடையாதாம்.

360 டிகிரி கேமரா கொண்டு சில காட்சிகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ‘மாற்றான்’, ‘எந்திரன்’ படங்களுக்குப் பயன்படுத்திய Face Scanning Technology-ஐ இந்தப் படத்திலும் பயன்படுத்தியுள்ளார்கள். கார்த்தியின் 3-வது கதாபாத்திரத்தை இதன் மூலமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் 8 நிறுவனங்கள் பணியாற்றி இருக்கின்றன. கிராபிக்ஸ் பணிகளைப் பார்ப்பவர்கள், பொங்கலுக்கு தான் முடிவடையும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைத்து நிறுவனங்களிடமும் பேசி தீபாவளிக்கு வேண்டும் என்று இறுதி செய்திருக்கிறார்கள். மும்பை, சென்னை, புனே, கேரளா, பெங்களூர் ஆகிய ஊர்களில் இப்படத்தின் பணிகள் நடைபெற்று இருக்கிறது.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, பணவிரயமின்றி பண்ண வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் படத்தின் காட்சியமைப்புகளுக்கு என்ன வேண்டும் என்பதை ஸ்டோரி போர்டு மூலம் வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் கோகுல். அதனைத் தொடர்ந்து கிராபிக்ஸ் காட்சிகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை முன்பே ஒரு சிறு குறும்படமாக எடுத்து இறுதி செய்திருக்கிறார்கள்.

கார்த்தி இதுவரை நடித்து வெளிவந்த படங்களின் பட்ஜெட்டைவிட இப்படத்துக்கு 2 மடங்கு அதிகம் என்கிறது படக்குழு. தமிழ், தெலுங்கு, மலையாளம் என உலகமெங்கும் சுமார் 1700 திரையரங்குகளில் வெளியாகிறது ‘காஷ்மோரா’.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் கண்டுகளிக்கும் படமாக ‘காஷ்மோரா’ நிச்சயம் இருக்கும் என்று உறுதி அளிக்கிறது படக்குழு.