சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். முன்னதாக இன்று (ஆகஸ்ட் 16-ம் தேதி) காலை 6.30 மணியளவில் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த உணவு செலுத்தும் குழாய் அகற்றப்பட்டு புதிய உணவுக் குழாய் பொருத்தப்படுகிறது. அதன் நிமித்தமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றபடி அவர் இன்றைக்கே வீடு திரும்புவார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 8 மாதங்களாக வீட்டில் ஓய்வு எடுத்துவரும் நிலையில் அவர் இன்றைக்கு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து திமுகவின் பொன்முடி கூறும்போது, “திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார். அவர் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உணவு செலுத்த புதிய குழாய் மாற்றப்பட்டு அவர் இல்லம் திரும்பியுள்ளார்” என்றார்.

மருத்துவமனைக்கு திமுக தலைவர் கருணாநிதியின் மகள்கள் கனிமொழி, செல்வி, கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் மற்றும் சில உறவினர்களும் இருந்தனர்.