“விவாதங்களை உருவாக்குவதே தரமான படத்துக்கு அடையாளம்!” – கார்த்திக் சுப்புராஜ்

மதுரையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி திரைத்துறைக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. இதனால் திரைத்துறைக்கு இளைஞர்களின் வருகை அதிகமாகி உள்ளது.

திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சம் என்ற நிலைமை மாறி, தற்போது விவாதப் பொருளாக உருமாறியுள்ளது. விவாதங்களை உருவாக்குவதே தரமான திரைப்படங்களுக்கு அடையாளம். இது நிச்சயம் ஒரு ஆரோக்கியமான அறிவுசார் சமூகத்திற்கு வழிவகுக்கும்.

திரைத்துறை படிப்புகள் மதுரையிலும் துவங்கப்படுவது மகிழ்ச்சியான விஷயம். திரைத்துறைக்கு வர விரும்பும் இளைஞர்கள் திரைப்படங்களை பார்த்து விவாதிப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

காதல், ஆக்ஷன், காமெடி என ஒரே மாதிரி கருத்துக்களை கொண்ட படங்களை இயக்காமல், பரிட்சார்த்த முறையில் திரைப்படங்களை இயக்க இளம் இயக்குநர்கள் முன்வர வேண்டும். பாலச்சந்தர், மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் நல்ல நாவல்கள் மற்றும் சிறுகதைகளை திரைப்படங்களாக இயக்கினர். அந்த நிலை திரும்ப வேண்டும. நல்ல இலக்கியங்களை திரைப்படங்களாக்குவதன் மூலம் தரமான படைப்புகளை வெளிக்கொண்டு வர முடியும்.

கதாசிரியர்களும், இயக்குநர்களும் இணைந்து பணியாற்றும் சூழல் அவசியம். தொழில்நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு திரைப்படங்களை இயக்க முடியாது. இலக்கிய துணை இருந்தால் மட்டுமே கற்பனைத் திறன் அதிகரிக்கும். எனவே திரைத்துறைக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு இலக்கிய அறிவு அவசியம்.

இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் பேசினார்.