“ஆண்டுக்கு 10 படங்கள் தயாரிக்க திட்டம்!” – நடிகர் கரிகாலன் 

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ‘சோலையம்மா’ படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன். அதற்குப்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 70 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். அவற்றில் ‘ரமணா’, ‘அரவான்’, ‘அடிமைசங்கிலி’, ‘நிலாவே வா’, ‘கருப்பி’, ‘ரோஜா’, ‘தயா, ‘தேவன்’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.  இவர் இயக்கி நடித்த படம் ‘வைரவன்’.

சில காலம் நடிப்பு, இயக்கம் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த கரிகாலன், ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்.

தற்போது மீண்டும் கலைத்துறையில் கால் பதிக்கிறார். காமராஜர் மீது அதிக பற்று கொண்டவர் கரிகாலன் என்பதால், ‘காமராஜர் கனவுக் கூடம்’ என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

இது குறித்து கரிகாலன் கூறுகையில், “மது ஒரு மனிதனையும், அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல; ஒரு நாட்டையே சின்னாபின்னமாக்கி விடுகிறது. அடிப்படை கல்வியாக போதிக்க வேண்டிய கல்வி, ஒழுக்கம், தேசப்பற்று, பெரியவர்களுக்கு மரியாதை , உற்சாகமாக இருப்பது., உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை, பக்தி ஆகியவற்றை போதிக்க தவறி விட்டோம்.

இதையெல்லாம் அடிப்படை கல்வியாக போதித்து இருந்தால் நம் நாடு உலக மக்களிடையே முதல் நாடாக இருந்திருக்கும். இதையெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டுமானால் என் கையில் உள்ள ஆயுதத்தால் செயலாக்க முடியும் என்று யோசித்தேன். அந்த ஆயுதம் “”சினிமா”. அதனால் தான் சினிமா கம்பெனி ஆரம்பித்துள்ளேன்.

அதன்மூலம் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத, குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும்விதமாக், கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம். எங்களால் எல்லாரையும் திருத்த முடியாது., ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற எண்ணம் தான் எங்களுக்கு.

நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு ஒரு ஆசை. என்னை சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறேன்” என்றார் நடிகர் கரிகாலன்.