கமலின் சாயம் வெளுத்துப் போச்சு…. டும் டும் டும் டும்…!

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நான் டிடிவி. தினகரனின் ஆதரவாளன் அல்ல. இன்னும் விரித்துச் சொல்ல வேண்டும் என்றால், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட 59 வேட்பாளர்களில் எவரது அபிமானியும் இல்லை நான்.

தேர்தல் என்று வந்தால், யாரோ ஒருவர் நிச்சயம் வெற்றி பெறுவார். எனவே நானோ, நீங்களோ ரா.கி. நகர் வாக்காளர் இல்லை என்றாலும், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ‘இன்னார் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும்’ என ஒரு எதிர்பார்ப்பை கண்டிப்பாக வளர்த்து வைத்திருப்போம்.

வேட்புமனு தாக்கல், பரிசீலனை, நிராகரிப்பு, வாபஸ் என சகல சடங்குகளும் முடிந்தபிறகு, சொல்லிக்கொள்கிற மாதிரி 5 வேட்பாளர்கள் களத்தில் நின்றார்கள். மதுசூதனன் (ஆளும் அதிமுக), டிடிவி.தினகரன் (போட்டி அதிமுக), மருது கணேஷ் (திமுக), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி), கரு.நாகராஜன் (பாஜக) ஆகிய 5 வேட்பாளர்களே அவர்கள்.

(டிடிவி.தினகரனை “சுயேட்சை வேட்பாளர்” என்று தேர்தல் ஆணையம் டெக்னிக்கலாக அறிவித்தாலும், அவரை பத்தோடு பதினொன்று என சாதாரண சுயேட்சையாக கருத முடியாது. “முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வழிவகை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை 18 அதிமுக எம்எல்ஏ.க்கள் மூலம் ஆளுநருக்கு கொடுத்தனுப்பியவர் அவர். சில அதிமுக எம்.பி.க்களின் ஆதரவையும் பெற்றிருந்தவர். “நாங்கள் தான் உண்மையான அதிமுக. வில்லன்கள் வசம் இருக்கும் இரட்டை இலையை தோற்கடித்து, அந்த சின்னத்தையும், கட்சியையும் மீட்டெடுப்போம்” என முழங்கி வந்தவர். எனவே அவரை “போட்டி அதிமுக வேட்பாளர்” என புரிந்துகொள்வதே யதார்த்தத்துக்கு பொருத்தமாக இருக்கும்.)

இப்போது நம் கேள்வி என்னவென்றால், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாத, தன் சார்பில் யாரையும் களமிறக்காத சினிமா நடிகர் கமல்ஹாசன், இந்த 5 வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்திருப்பார் என்பது தான்.

“கைப்பிளை”களுக்கு எதிராக காற்றில் கம்பு சுற்றுவதை வாடிக்கையாகக் கொண்ட கமல், ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனோ, போட்டி அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரனோ வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும் என்று நிச்சயம் விரும்பியிருக்க மாட்டார். அதுபோல் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் 50 ஆண்டுகால ஆட்சியை பொத்தாம்பொதுவாக குருட்டாம்போக்கில் குறை சொல்லும் அவர், திமுக வேட்பாளர் மருது கணேஷ் வெற்றி பெறுவதை விரும்பியிருக்க மாட்டார். தன்னை சீமான் கடுமையாக விமர்சித்து வருவதால், அவரது வேட்பாளரான கலைக்கோட்டுதயம் வெற்றி பெறவும் கமல் ஆசைப்பட்டிருக்க மாட்டார். எனில், எஞ்சியிருப்பது பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் மட்டும் தான். “கருப்புக்குள் காவி இருக்கிறது” என்றும், “தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பேன்” என்றும் நூல்விட்டுக் கொண்டிருக்கும் கமல், ரா.கி.நகர் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பாரோ? அது நடக்காத ஆத்திரத்தில், நோட்டாவுக்கும் குறைவான வாக்குகள் பெற்று பாஜக படுபாதாளத்துக்குள் தள்ளப்பட்டுவிட்ட ஆவேசத்தில் நிதானமிழந்து, வெற்றி பெற்ற தினகரனை ‘திருடன்’ என்றும், அவருக்கு வாக்களித்த மக்களை “பிச்சைக்காரர்கள்” என்றும் வசைமாரி பொழிந்து, புழுதி வாரி தூற்றுகிறாரோ? என சந்தேகிக்கத் தோன்றுகிறது.

உண்மையில், தினகரனின் வெற்றி எதிர்பாராத ஒன்று அல்ல. அவர் மீது “20 ரூபாய் டோக்கன்” என்ற குற்றச்சாட்டு கூறப்படுவதற்கு முன்பே, அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே, லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், தினகரனுக்கே வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. இந்த கருத்துக்கணிப்பு சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு நான் அப்போதே வந்துவிட்டேன். காரணம் –

1.ரா.கி. நகர் தொகுதி அதிமுக.வின் கோட்டை. 2001ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் – அதிமுக ஆட்சியை கைப்பற்றினாலும் சரி, பறி கொடுத்தாலும் சரி – தொடர்ந்து அதிமுகவே இங்கு வெற்றி பெற்று வந்துள்ளது. அதனால் தான் ஜெயலலிதா அவசரமாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நிலை வந்தபோது, இந்த தொகுதியை தேர்ந்தெடுத்தார். எனவே, இந்த முறையும் ஒரு அதிமுக வேட்பாளரே இங்கு வெற்றி பெறுவார். வேறு கட்சிகளுக்கு அந்த வாய்ப்பில்லை

2.பேராசிரியர் ராஜநாயகத்தின் கருத்துக்கணிப்பு கூறியபடி, தொகுதி முழுக்க பாஜக எதிர்ப்பு அலை வீசியது. அது ஆளும் அதிமுகவையும் பாதித்தது. “பாஜகவின் நிர்பந்தத்துக்கு பணிந்து பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ‘அம்மா’வின் ஆட்சியையும், கட்சியையும் அழித்துவிடுவார்கள். எதிர்காலத்தில் அதிமுக என்ற கட்சி இருக்க வேண்டும் என்றால், பாஜக மற்றும் மோடி அரசின் அனைத்து தாக்குதல்களையும் சமாளித்து எதிர்த்து நிற்கும் தினகரன் வசம் அது இருந்தால் தான் காப்பாற்றப்படும்” என்று பெரும்பாலான அதிமுக வாக்காளர்கள் நம்பினார்கள். எனவே, அதிமுகவின் அடுத்த தலைமை யார் என்ற கேள்விக்கு விடை அளிக்கும் வகையில், அவர்கள் ஆளும் அதிமுக வேட்பாளரான மதுசூதனனை பின்னுக்குத் தள்ளி, போட்டி அதிமுக வேட்பாளரான தினகரனையே தேர்வு செய்வார்கள்.

உண்மை இப்படியிருக்க, காவியோ, அல்லது வேறு ஏதோவொன்றோ கண்ணை மறைப்பதால் கமலுக்கு இந்த கள யாதார்த்தம் தெரியவில்லை; அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்.

எனில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படவே இல்லையா? கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அது வாக்கு வித்தியாசத்தின் அளவை அதிகரிக்க உதவியிருக்குமேயொழிய, வெற்றியே பணம் கொடுத்ததால் தான் வந்தது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

கமலிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்:- மாநிலங்களவைத் தேர்தலின்போது, சோனியா காந்தியின் ஆலோசகரான அகமது பட்டேலை தோற்கடிக்க நினைத்து, குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை மோடியும், அமித்ஷாவும் விரட்டி விரட்டி விலைக்கு வாங்கினார்களே… அப்போது விலைபோன அந்த எம்எல்ஏக்களை ‘பிச்சைக்காரர்கள்’ என்று நீங்கள் வசைபாடாதது ஏன்? குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போது மோடியும், அமித்ஷாவும் எதிரணியைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக ஆளுக்கு ஒரு கோடி என பேரம் பேசிக் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை, அந்த தலைவர்கள் செய்தியாளர்கள் முன் கொண்டுவந்து கொட்டி அம்பலப்படுத்தினார்களே… அப்போது மோடியையும், அமித்ஷாவையும் “திருடர்கள்” என நீங்கள் திட்டித் தீர்க்காதது ஏன்?

கமலின் சாயம் வெளுத்துப் போச்சு…. டும் டும் டும் டும்…!

அமரகீதன்