“பிறகு அதை கலைஞர் மனசுல வெச்சுக்கவே இல்லை!” – கமல்ஹாசன்

முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் தான் நெருங்கி பழகியது பற்றியும், முரண்பட்ட தருணங்கள் பற்றியும், வியாழனன்று வெளியான ‘ஆனந்த விகடன்’ பேட்டியில் கமல்ஹாசன் கூறியிருப்பது:

கலைஞருடன்  நிறைய நெருங்கிப் பழகியிருக்கேன். அதேபோல் அவருடன் முரண்பட்ட தருணங்களும் உண்டு. 1988-னு நினைவு. அப்போ இங்கே கவர்னர் ஆட்சி. ‘நாயகன்’, ‘வேதம் புதிது’, ‘வீடு’, வாலி சார் கதை எழுதின ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படம்னு அந்த வருஷம் தமிழுக்கு மொத்தம் எட்டு தேசிய விருதுகள். அப்போ யாரைக் கூப்பிட்டு நிகழ்ச்சி நடத்துறதுன்னு தெரியலை. ஜானகி அம்மா, சிவாஜி சார், கலைஞர் மூணு பேரையும் கூப்பிட்டு அவார்டு கொடுக்கவைக்கணும்னு அந்த நிகழ்ச்சியையும் நான்தான் நடத்தினேன். இவங்க இருப்பதால், ஜெயலலிதா வர மாட்டார்கள் என்பதால், நான் அவரை அழைக்கவில்லை.

அந்த விழாவில் எல்லோருக்கும் அவார்டு  கொடுத்த கலைஞர், ‘ரிசர்வேஷனைக் கேலி பண்ற படம். கண்டிப்பா அதுக்கு என் கையால நான் விருது கொடுக்க மாட்டேன்’னு சொல்லி ‘ஒரே ஒரு கிராமத்திலே’ பட இயக்குநர் ஜோதி பாண்டியனுக்கு அவார்டு  கொடுக்க மறுத்துட்டார். அதுக்குக் காரணம், ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படம் பிராமணப் பெண்ணான லட்சுமி, தன்னை ஒரு தலித்னு சொல்லி இடஒதுக்கீட்டில் அரசு வேலை பெறுவது மாதிரியான கதைகொண்ட படம். மேலும் ‘பாலம் பழுதுபட்டு இருக்குனு பைபாஸ் போட்டோம்னா, அது எதுக்கு இப்போ போட்டீங்க?’னு கேட்கிற மாதிரி இருக்கு இந்தப் படம்’னு சொன்னார்.

கடைசியில் பேசின நான், ‘பாலம் பழுதுபட்டு இருக்குனு சொன்னீங்க. பாலம் பழுது பார்க்கப்பட வேண்டும். அதுக்கு நீங்க என்ன வேலை சொன்னாலும் அணிலா இருந்து செய்றோம். ஆனால், பைபாஸ் போட்டாச்சு. அது போதும்னு விட முடியாது’னு பேசினேன். பாலம் பழுது பார்க்கப்பட வேண்டும் என்பது பெரிய கொத்தனார் வேலை. 200 வருஷத்துக்கான வேலைனு அதை மனசுல வெச்சு சொன்னேன்.

பிறகு வீட்டுக்குப் போனவர், ‘உன்னைக் கடைசியில பேசவிட்டா, இப்படிச் சொல்லிட்டியே’னு போன்ல கூப்பிட்டு வருத்தப்பட்டுட்டு, ‘இல்ல, நான் பேசினது தப்புனு பிரஸ்கிட்ட சொல்லிடு’ன்னார். ‘இல்ல ரைட்டுனு நீங்கல்லாம் சொல்லிக் கொடுத்ததனாலதான்யா அப்படிப் பேசினேன்’னேன். ‘அப்படியா’ன்னார். ‘ஆமாங்கய்யா’ன்னேன். அவ்வளவுதான், போனை டொக்குனு வெச்சுட்டார். `ஆமாங்கய்யா’னு பளிச்சுனு சொன்ன தொனியில எதுவும் கோவிச்சுகிட்டாரா கேளுங்க’னு அவர் பக்கத்துல உள்ளவங்ககிட்ட சொன்னேன். ‘அவன் மேடையில சொல்லிட்டான். இப்பப்போய் மாத்திச் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை. தவிர நான் சொன்னது ரைட்டுனு சொல்றான். அவனை இனிமே புத்தி சொல்லித் திருப்ப முடியுமா? போயிட்டுப் போறான் விட்டுடு’ன்னாராம். பிறகு அது எதையும் அவர் மனசுல வெச்சுக்கவே இல்லை.

’தசாவதாரம்’ சமயத்தில் சந்திச்சப்ப, ‘இந்த மாதிரி கதை. இதில் இத்தனை உருவங்கள் இருக்குய்யா’ன்னேன். ‘ஓ… இது எல்லாத்தையும் எப்படி இணைக்கப்போற?’ன்னு கேட்டவர், ‘எங்க கதையைச் சொல்லு, கேட்போம்’னு உட்கார்ந்துட்டார். முழுக் கதையையும் சொன்னேன். ‘இதை இப்படி வெச்சுக்கிட்டா பெட்டரா இருக்கும்’னு ஒரு சஜஷன் கொடுத்தார். இப்படி எப்பவும் கனெக்டடா இருக்கிறது, படம் போடும்போது பார்த்துட்டுப் பெருமைப்படுறதுனு எங்களை மாதிரிக் கலைஞர்களுக்கு அது பண்ணாலே போதும். நீங்க வரிவிலக்குக்கூட கொடுக்க வேண்டாம்.