பிக் பாஸ் போரடிக்குது: சண்டை போடுங்கடா… டேய்!

பிக் பாஸ்: 27.07.2017

***

பிக் பாஸ் சலிப்புறத் துவங்கிவிட்டது. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்கிற விக்கிரமன் பாடல் பிஸ்னஸ் எல்லாம் வேலைக்கு ஆகாது. We want emotion. நன்மைக்கும் தீமைக்குமான முரணியக்கம்தான் வாழ்வை சுவாரசியமாக்குகிறது. வாத்யார் சுஜாதா சொன்னதுதான், மோட்சம் bore. நரகம்தான் சுவாரசியம். விதம்விதமான தீமைகள்தான் சுவாரசியம்.

***

என்றாலும், ஓவியாவின் ரகளையான காலை நடனத்துடன் நிகழ்ச்சி தினமும் துவங்குவது இந்த சலிப்பைப் போக்குகிறது. ‘மையா.. மையா.. பாடலுக்கு காயத்ரியை விட அற்புதமாக நடனமாடினார். இதுவரை பிக் பாஸ் நிகழச்சிகளில் ஓவியா ஆடிய நடனத்தையெல்லாம் இணைத்து ஒரு டிவிடி கிடைத்தால் நன்றாக இருக்கும். Tamil rockers மனது வைக்குமா?

**

ஓவியா பெரும்பாலும் ஆண்கள் அறையில்தான் பொழுதைக் கழிக்கிறார். கமல் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. ஆண்களைப் போன்ற கீழானவர்களும் இல்லை, நேர்மையாளர்களும் இல்லை.

**

செல்ஃபி task -ல் ‘Self Discovery’ என்கிற சொற்களை கணேஷ்ராம் சொன்னது மிக முக்கியமான விஷயம்.

**

சந்தடி சாக்கில் எல்லாம் சக்தி தன்னை ‘நடிகன்’ என்று சொல்லிக் கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை எவராவது நிச்சயம் ஆட்சேபிக்க வேண்டும். சக்தி சமயங்களில் sensible ஆக பேசுகிறார். கை ஓங்கியதற்காக ஓவியாவிடம் மனமார மன்னிப்பு கேட்டிருந்தால் இன்னமும் உயர்ந்திருப்பார்.

***

இந்தக் குழுவில் வெளிப்படையான rebel ஆக ரைசா மாறிவிட்டார். வெளியேற வேண்டும் என்கிற சலிப்பு அவரிடம் தென்படுகிறது. அதற்காக நிறைய முரண்டு பிடிக்கிறார்.

***

போட்டியாளர்கள் சமயங்களில் மணிரத்னம் படத்தில் வருவது போல் பேஸ் வாய்ஸில் பேசிக் கொள்ளும்போது ‘என்ன புறம் பேசுகிறார்கள்’ என்பது நமக்கு கேட்காமல் போகிறது. அதற்காகவா நாம் குத்த வைத்து உட்கார்ந்திருக்கிறோம்? இனி ‘பராசக்தி’ சிவாஜி மாதிரி ஒவ்வொருவரும் தெளிவாக பேச வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட வேண்டும். தியேட்டர் பிரிண்ட் பார்ப்பது போல இருக்கிறது.

***

ஆரவ் செய்த பொம்மை அழகு. அவருக்குத்தான் பரிசு என்று எதிர்பார்த்தேன். உண்மையாகி விட்டது. கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட, அவை இரண்டும் சேர்ந்து…

**

எவரையாவது நிழலாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற வாய்ப்பு ஆரவ்விற்கு கிடைத்ததும் அவர் ஓவியாவைத்தான் தேர்ந்தெடுப்பார் என்பது வெளிப்படை. ஏனெனில் அது அடிமை மாதிரியான நிலை. வேறு எவராக இருந்தாலும் கோபித்துக் கொள்வார்கள், ஓவியா கோபிக்க மாட்டார் என்று ஆரவ் யோசித்தது சரி. ஓவியா இதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டது அவரது உள்ளக் கிடக்கையைக் காண்பிக்கிறது. இந்த ஆரவ் பயலுக்கு இத்தனை பெரிய ஜாக்பாட் செரிக்காது.

***

வீட்டின் சோம்பேறி யார் என்கிற தேர்விற்கு ரைசாவை, ஆரவ் தேர்ந்தெடுத்தது சாலப் பொருத்தம். இதை நயமாக அவர் சொன்ன விதம் அழகு. பூவுடன் சேர்ந்த நார் மாதிரி, ஓவியாவுடன் இணைந்த ஆரவ்வும் மற்றவர்களை புண்படுத்தாமல் பேசக் கற்றுக் கொண்டது முன்னேற்றம்.

**

ஒவ்வொரு task முடிந்ததும் ஒரு பரிசு கொடுப்பது சிறந்த உளவியல் உத்தி. பாவ்லோவ் நாய் போல. மிருகங்களைப் பழக்குகிறவர்கள் அவை வேலையைச் சரியாக செய்து முடித்ததும் உணவு அளித்து பழக்குவார்கள்.

***

ஜூலி வெளியே அமர வைக்கப்பட்டதை Ego issue வாகவும் அவமானமாகவும் எடுத்துக்கொண்டு சவக்களையுடன் அமர்ந்திருந்தார். இதுவே ஓவியாவாக இருந்திருந்தால் கவலையே படாமல் மழையில் செம குத்து நடனம் போட்டிருப்பார். சோதனையான கணங்களையும் சாதனையாக மாற்றுவது நம்மிடம்தான் இருக்கிறது.

***

ஓவியாவைக் காப்பாற்றாமல் சிநேகனை காப்பாற்றலாம் என்கிறார் ஆரவ். அட அற்பப் பதர்களே.. ஓவியாவை காப்பாற்ற தமிழ்நாடே தயாராக இருக்கிறது என்பதை இன்னமுமா நீங்கள் உணரவில்லை?

***

இந்த நிகழ்ச்சியில் சிநேகன் முதன்முறையாக ஓர் ஆணைக் கட்டிப்பிடித்திருக்கிறார். மிகப் பெரிய மாற்றம்.

***

வையாபுரி, ஆரவ் -ஓவியா ஜோடியை ஓட்டுவது செம ஜாலியாக இருக்கிறது. புண்படுத்தாத நகைச்சுவையென்பது அமிர்தம் போன்றது.

***

நாளை மறுபடியும் ஓவியாவை அழவிட்டிருக்கிறார்கள். சில பிரம்மாஸ்திரங்களை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது என்பதை பிக் பாஸ் அறிந்திருக்க வேண்டும்.

SURESH KANNAN

 

Read previous post:
0
“பிறகு அதை கலைஞர் மனசுல வெச்சுக்கவே இல்லை!” – கமல்ஹாசன்

முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் தான் நெருங்கி பழகியது பற்றியும், முரண்பட்ட தருணங்கள் பற்றியும், வியாழனன்று வெளியான ‘ஆனந்த விகடன்’ பேட்டியில் கமல்ஹாசன் கூறியிருப்பது: கலைஞருடன்  நிறைய நெருங்கிப்

Close