“இயக்குனர் அமீரை பாஜகவினரின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தது பெரும்பாடு!” – கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை:

தமிழகத்தில் நடைபெறும் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா?, அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் நேற்று (08.06.2018) கோவையில் சிறப்பான வட்டமேசை விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக சார்பில் திரு. டி.கே.எஸ். இளங்கவோன் எம்.பி., பாஜக சார்பில் திருமதி தமிழிசை சவுந்தரராசன், சிபிஐ (எம்) சார்பில் நானும், அஇஅதிமுக சார்பில் திரு. செம்மலை எம்.எல்.ஏ., தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் திரு. ஞானதேசிகன், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் திரு. உ. தனியரசு எம்.எல்.ஏ., இந்திய குடியரசுக் கட்சி சார்பில் திரு. செ.கு. தமிழரசன், இயக்குநர் திரு. அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை திரு. கார்த்திகைச் செல்வன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை பற்றியும் அதன் பின்னணி குறித்தும் தெளிவான முன்னுரையோடு கார்த்திகைச் செல்வன் விவாத நிகழ்ச்சியை துவக்கினார். திமுக தொடங்கி ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் போராட்டங்களின் பின்னணி குறித்து, அவரவர்களது கருத்தை அழுத்தமாக முன்வைத்தார்கள். இயற்கையாகவே விவாதத்தில் மாற்றுக்கட்சியினரது அணுகுமுறைகளை அழுத்தமாக விமர்சிக்கும் வகையில் கருத்துக்கள் எடுத்துவைக்கப்பட்டன. அவைகளுக்கு பதில் சொல்லும் வகையிலும் விவாதம் எதிரும், புதிருமாக அழுத்தமாகவும், ஆழமாகவும் கருத்துக்கள் இடம்பெற்றன. பார்வையாளர்கள் மத்தியிலிருந்து விவாதக் கருத்துக்களுக்கு ஏகோபித்த ஆதரவும், மாறுபட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு கோஷங்களும் இடம்பெற்றிருந்தன.

மொத்தத்தில் நடைபெற்ற முதல்சுற்றில் ஆரோக்கியமான விவாதம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் இயக்குநர் அமீர் அவர்கள் பேசத் துவங்கியதுடன் எதிரில் அமர்ந்திருந்த பாஜகவினர் கூச்சலையும், குழப்பத்தையும் உண்டாக்கி நிகழ்ச்சியை தொடர முடியாமல் மேடையை நோக்கி தாக்கும் நோக்கோடு முன்னேறினர். காவல்துறையினரும், மற்றவர்களும் மிகுந்த சிரமப்பட்டு அவர்களை தடுத்து அமைதி காக்க வேண்டுகோள் விட்டனர். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நிகழ்ச்சியை ரத்து செய்வதிலேயே குறியாகக் கொண்டு பாஜகவினர் கோஷம் எழுப்பி தரையில் அமர்ந்து தர்ணா செய்து கொண்டிருந்தார்கள். பாஜக மாநிலத் தலைவர் அவர்களை அமைதி காக்க வேண்டுமென விடுத்த வேண்டுகோளையும் பாஜகவினர் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் அராஜகம் செய்தது மட்டுமின்றி வன்முறை தொடுக்கும் முனைப்பிலும் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார்கள். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைச் செல்வன் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கட்சி தலைவர்களது வேண்டுகோளையும் பாஜகவினர் பொருட்படுத்தவில்லை. இறுதியாக வேறுவழியின்றி அடுத்த சுற்று விவாதத்தை தொடர்வதற்கு வழியின்றி நிகழ்ச்சியை அரைகுறையாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. .

அனைத்துக்கும் மேலாக நிகழ்ச்சி முடிந்து இயக்குநர் அமீர் அவர்களை பாஜகவினரின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைப்பது பெரும்பாடாகிவிட்டது. காவல்துறையும், இதர அரசியல் கட்சியினரும் எச்சரிக்கையாக செயல்பட்டதன் விளைவாக இயக்குநர் திரு. அமீர் அவர்கள் தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டார்.

நவீன ஊடகத்தில் இத்தகைய விவாதங்கள் நடத்துவது பொதுமக்களுக்கு சரியான புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு பெரிதும் பயன்படும். இத்தகைய விவாதங்களில் எதிரும், புதிருமான கருத்துக்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது என்பது அறிந்ததே. இவ்வகையான கருத்து மோதல்கள் மக்களுக்கு சரியான புரிதலை உருவாக்க உதவி செய்யும். ஆனால் பாஜகவினர் இத்தகைய விவாதங்களில் தங்களது தலைவர்கள் கருத்துச் சொல்வதை அனுமதித்துவிட்டு, மாற்றுக் கருத்து சொல்லும் போது கலவரம் செய்வது, வன்முறையை தூண்டுவதின் மூலம் நிகழ்ச்சியை தொடர முடியாமல் ரத்து செய்வது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் நிகழ்வாகும். பாஜகவின் இத்தகைய சகிப்புத்தன்மையற்ற போக்கினை தமிழகத்தில் அனுமதிப்பது ஆபத்தான விளைவை உண்டாக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

மாற்றுக்கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லையெனில் பாஜகவினர் இத்தகைய விவாத நிகழ்ச்சியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதே நல்லது. அதற்கு மாறாக நிகழ்ச்சிகளை சீர்குலைப்பது தொடர்கதையாகும்பட்சத்தில் இத்தகைய வன்முறைப் போக்கினை எதிர்த்து அனைத்து ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் ஒன்றுசேர்ந்து குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

 இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.