ஜானி – விமர்சனம்

‘துரோகி ஜானி’ (Johnny the Traitor) என பொருள்படும் ‘Johnny Gaddaar’ என்ற இந்தி படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. எதிர் நாயகனை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்ட இந்த கிரைம் திரில்லர், அதன் சுவாரஸ்யம் குறையாமல் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு தற்போது ‘ஜானி’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக்  ஆகிய ஐவரும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் பிசினஸ் பார்ட்னர்கள். சூதாட்ட  கிளப், மதுபானக் கூடம் என பல தொழில்களைச் செய்துவரும் இவர்கள் பணத்துக்காக சில சட்டவிரோதச் செயல்களையும் செய்கின்றனர்.

ரெண்டரை கோடி ரூபாய் பணம் தயார் செய்தால் கையில் விலை உயர்ந்த போதைப் பொருள் கிடைக்கும் என்று பிரபுவின் நண்பர் சாயாஜி ஷிண்டே கொச்சியிலிருந்து கூறுகிறார். இதற்காக ஐவரும் இணைந்து ஆளுக்கு ரூ.50 லட்சம் ஏற்பாடு செய்கிறார்கள்.

பணத்தை சாயாஜி ஷிண்டேவிடம் யார் கொடுப்பது, பொருள் வாங்குவது எப்படி? பயணமுறை, பிக் அப் செய்வது என எல்லாம் பக்காவாக திட்டமிடப்படுகிறது. ஆனால், பணத்தை எடுத்துச் செல்லும் ஆத்மா பாட்ரிக் கொல்லப்படுகிறார். அதற்கடுத்து பிரபு, சாயாஜி ஷிண்டே, ஆனந்த் ராஜ், அஷுதோஷ் ராணா என நால்வரும் அடுத்தடுத்துக் கொல்லப்படுகிறார்கள்.

0a1b

இந்தக் கொலைகளைச் செய்பவர் யார், ஏன், அந்தக் கொலைக்கான பின்னணி என்ன, பிரசாந்த் எப்படி இதில் சிக்கி மீள்கிறார், துரோகி யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

நாயகன் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது பார்முக்கு வந்திருக்கிறார். காதல், ஆக்ஷன் என படத்தில் வித்தியாசமான பிரசாந்த்தை பார்க்க முடிகிறது. சஞ்சிதா ஷெட்டி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.

திருப்பங்களுடன் வரும் பிரபுவின் கதாபாத்திரம், காமெடி கலந்த வில்லத்தமான ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் கதாபாத்திரங்கள் சிறப்பாக வந்துள்ளது. ஷாயாஜி ஷிண்டே போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

தியாகராஜனின் திரைக்கதை – வசனம் ப்டத்துக்கு விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் சேர்த்துள்ளது. அறிமுக இயக்குனர் பி.வெற்றிசெல்வனின் இயக்கம் கதையை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறது. எனினும், தேவையில்லாத சில காட்சிகளை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

.ஜெய்கணேஷின் பின்னணி இசை படத்திற்கு பலம். எம்.வி. பன்னீர் செல்வம் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

`ஜானி’  – பரபர திரில்லர்!