தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், 100 வது நாள் நடந்த அமைதிப் பேரணியில் போலீஸார் அராஜகமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். உலகெங்கும் வாழும் தமிழர்களை உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு விவகாரத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்தன.

இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட எடப்பாடி பழனிசாமி அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை போதாது, நீதிமன்றத்தில் நிற்காது என்றும்,  சட்டப் பேரவையை கூட்டி ஆலையை மூடும் முடிவை தீர்மானமாக நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசு மறுத்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக இயங்க உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. “ஸ்டெர்லைட் ஆலையை ஜனவரியில் திறப்போம்” என வேதாந்தா குழும தலைவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலையை திறப்பது குறித்த வழக்கு நடந்துவந்தது.

வேதாந்தாவின் வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நீதிபதி தருண் அகர்வால் குழு மூலம் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டதன்பேரில் ஆய்வு நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்க அனுமதிக்கலாம் என தருண் அகர்வாலா குழு பரிந்துரை செய்திருந்தது.

ஸ்டெர்லைட் வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வாதாடி வந்தனர். இந்நிலையில் இன்று பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. அதில், தருண் அகர்வால் குழுவின் பரிந்துரையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து; துண்டிக்கப்பட்ட மின்சாரத்தையும் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும்போது மாவட்ட ஆட்சியர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.