தலைமை செயலாளர் வீடு, அலுவலகத்தில் சோதனை: பணம், தங்கம் சிக்கியது!

தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடு சென்னை அண்ணாநகரில் உள்ளது. இந்த வீட்டுக்கு இன்று (புதன் கிழமை) அதிகாலை 6 மணிக்கு மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து சோதனையிட தொடங்கினர்.

ராமமோகன ராவ் மகன் விவேக் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை தொடங்கியது. போலீஸார் குவிக்கப்பட்டனர்.

செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களும் குவிந்தனர். இந்நிலையில், பகல் 12 மணியளவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தலைமைச் செயலாளர் வீட்டுக்கு வந்தனர். 15 பேர் கொண்ட குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது. இதனால், பரபரப்பு கூடியது.

இதற்கிடையே, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், இரண்டாவது தளத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவல் அறைக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினார்கள்.

தலைமைச் செயலகத்திலும் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒருவர் வருமான வரி சோதனைக்கு ஆளாகியிருப்பது இதுவே முதன்முறை. மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு வருமான வரித்துறையினர் சென்றுள்ளதும் இதுவே முதன்முறை.

சில தினங்களுக்குமுன் சேகர் ரெட்டியிடமிருந்து கோடிக்கணக்கான பணம், தங்கக்கட்டிகள், ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டிலும், அவரது தலைமைச் செயலக அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி 40-க்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், ராம மனோகர ராவின் மகன் விவேக் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு, ரூ.18 லட்சம் ரொக்கப் பணம் (புதிய ரூபாய் நோட்டுகள்), தலா ஒரு கிலோ எடை கொண்ட 2 தங்கக் கட்டிகள் ஆகியவற்றை கைப்பற்றினர். இவை சித்தூரில் விவேக் மாமனார் வீட்டில் கைப்பற்றப்பட்டன

இந்நிலையில், சோதனைகள் நள்ளிரவு வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.