நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்–3

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை, இந்திய மக்கள் கொண்டாடினர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

முன்னதாக, விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டன. சந்திரயான் 3 விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியது. இதனை தொடர்ந்து விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1. 05 மணிக்கு துல்லியமாக தொடங்கியது. இந்நிலையில் கவுண்டவுன் முடிவடைந்து சரியாக 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் விண்ணில் பாய்ந்த சந்திரயான் 3, முந்தைய சந்திரயான் -2 விண்கலத்தின் தொடர்ச்சி என்றாலும், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைவதற்குத் தேவையான சிக்கலான அம்சங்கள் இதில் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோடிக்கணக்கான இந்தியர்கள் சந்திரயான் 2 விண்கலத்தின் பயணத்தை ஆர்வமுடன் கண்காணித்து வந்தனர். ஆனால் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்தது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது.

கடந்த கால தவறுகளை கருத்தில் கொண்டு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது இஸ்ரோ. குறிப்பாக விக்ரம் லேண்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிக வேகத்தில் தரையிறங்க ஏதுவாக கடந்த முறையை விட விக்ரம் லேண்டரின் கால்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, நொடிக்கு 3 மீட்டர் அளவிற்கு பயணித்தாலும் கால்கள் உடையாத வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளன.