“ராஜா இதை பாலுவிற்கு செய்திருக்க வேண்டாம்!”

நான் மிக மதிக்கும் நேசிக்கும் ஆளுமைகளில் ஒருவர் எஸ்.பி.பி. சமயங்களில் என் தந்தையைப் போலவே அவரை உணர்வேன். அவருடைய நேர்காணல்களில் அத்தனை மென்மையும் நேசமும் இணக்கமான உபதேசங்களும் வெளிப்படும்.

ராஜா, எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய செய்தி உண்மையெனில் அது மிகவும் துரதிர்ஷ்டமானது. ஆனால் அதற்காக இந்தச் சந்தர்ப்பத்தில் ராஜாவை இகழ்வது முறையானதல்ல. அறிவுசார் சொத்துரிமை பற்றிய விழிப்புணர்வும் மதிப்பும் இல்லாத சூழலில் சட்டப்படி ராஜா செய்தது சரியே.

ஆனால் அவர் இதை பாலுவிற்கு செய்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. எத்தனையோ மேடைகளில் தன்னை முன்நிறுத்திக் கொள்ளாத உயர்குணத்தோடு ராஜாவைப் பற்றியும் அவரது இசைத்திறன்களைப் பற்றியும் மிக மிக உயர்வாக பேசி வந்திருப்பவர் பாலு. மட்டுமல்ல இருவரும் நெடுங்கால நண்பர்களும் கூட.

சட்டரீதியாக இது சரியான நடவடிக்கைதான் என்றாலும் பாலுவிற்கு இதைச் செய்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்திருக்கலாம் அல்லது நண்பருக்காக விட்டுத் தந்திருக்கலாம்.

இதைச் செய்ய விடாமல் ராஜாவின் தரப்பை தடுத்தது எது? இது போன்ற சமயங்களில்தான் ராஜா என்கிற ஆளுமையின் மீது வருத்தம் ஏற்படுகிறது.

SURESH KANNAN