தொடர் குழப்பத்தால் தொண்டர்கள் விரக்தி: ஊரெங்கும் தீபா பேரவை கலைப்பு!
முன்னுக்குப்பின் முரணான முடிவுகளை எடுப்பதால் தீபாவின் மீது நம்பிக்கை இழந்து விரக்தி அடைந்துள்ள தொண்டர்கள், தங்கள் ஊர்களில் தொடங்கிய பேரவையை கலைக்க முடிவு செய்துள்ளனர்.
குற்றவாளி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கினார். ஆனால், நிர்வாகிகள் பட்டியலை வெளியிடவில்லை. பின்னர், தீபாவும் அவரது கணவர் மாதவனும் தனித்தனியே நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டனர். இருவரும் மாறி மாறி முடிவுகளை எடுத்ததால் அவர்களை நம்பி வந்த தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தீபா மீது நம்பிக்கை இழந்த பலர், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லத் தொடங்கினர். ஆர்.கே.நகரில் போட்டியிடப் போவதாக தீபா அறிவித்தார். இந்நிலையில், தீபாவின் கணவர் மாதவன், நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று வணங்கினார். தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் தீபாவை சில தீய சக்திகள் இயக்குவதாகவும் கூறினார்.
மாதவனின் இந்த முடிவு குறித்து தீபா பேரவை தொண்டர்கள் சிலர் கூறும்போது, “தன்னை நம்பி வந்த தொண்டர்களை ஒருங்கிணைக்க தீபா தவறிவிட்டார். அவருக்கு பேரவையை தொடர்ந்து வழிநடத்தும் ஆர்வம் இருக்கிறதா என்றே சந்தேகமாக உள்ளது. இனியும் அவரை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால்தான் பலர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிட்டனர். நாங்களும் எங்கள் ஊர்களில் தொடங்கிய பேரவையை கலைக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.
தீபாவை ஆதரித்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறும்போது, ‘‘தீபாவின் செயல்பாடுகள் ஆரம்பம் முதலே முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. யாரையும் மதித்து பேசுவதில்லை. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து வெறுமனே பேசி வருகிறாரே தவிர, அதற்காக எந்த போராட்டமும் நடத்தவில்லை. சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய சூழலில் ஆர்.கே.நகரில் அவருக்கு டெபாசிட் கிடைப்பதே சிரமம். தொண்டர்களின் நம்பிக்கையை தீபா முற்றிலும் இழந்துவிட்டார்’’ என்றார்.
தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த தீபாவின் கணவர் மாதவன், சென்னை சிஐடி நகரில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இது குறித்து மாதவனின் ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘தீபா பேரவையில் பெரும்பாலான தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்த முடிவை மாதவனே அறிவிப்பார்’’ என்றனர்.
மாதவன் தனிக் கட்சி தொடங்குவது குறித்து தீபா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சசிகலா குடும்பத்தினர் எனக்கு தொடர்ந்து பல இன்னல்களை அளித்து வந்தனர். இந்நிலையில், என் குடும்பத்தை பிரித்துவிட வேண்டும் என நினைக்கின்றனர். எனது கணவரை தூண்டி விட்டு என்னை தனிமைப்படுத்த வேண்டும் என்று புதிய சதியில் ஈடுபட்டுள்ளனர். அவரையே எனக்கு போட்டியாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட கட்டாயப்படுத்தி இருக்கின்றனர்.
குடும்பத்தை பிரித்து என்னை தனிமைப்படுத்தினால், தேர்தலில் நான் போட்டியிடுவது சிரமமாகும் என்பது சசிகலா, டிடிவி தினகரனின் தவறான வியூகம். யார் எதிர்த்து நின்றாலும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.