ஹன்சிகா நடிக்கும் திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!

நாயகியை முதன்மையாகக் கொண்ட திரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார் ஹன்சிகா மொத்வானி. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்குகிறார். இவர் ‘மசாலா படம்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, போகன் படங்களில் யூ.ஆர்.ஜமீல் ஆற்றிய பணிகளால் ஈர்க்கப்பட்ட ஹன்சிகா,. இந்த படத்தின் கதையை கேட்டதும்  உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

இப்படத்துக்கு இசையமைக்கிறார் ஜிப்ரன். இது குறித்து இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் கூறுகையில், “ஜிப்ரான் சார் ஏற்கனவே மிகப்பெரிய படங்களில் இசையமைப்பாளராக இருப்பதால், என் படத்துக்கு இசையமைப்பாரா என்று சந்தேகித்தேன். என் கதை அவருக்கு பிடித்துப்போனது மகிழ்ச்சியளிக்கிறது. பாடல்களை விட படத்தின் பின்னணி இசை ஸ்கிரிப்ட்டுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளார். அவருடன் பணிபுரியும் சிறந்த அனுபவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

ஜியோஸ்டார் எண்டர்பிரைஸ் தயாரிப்பாளர் எம்.கோடீஸ்வர ராஜு மற்றும் நிர்வாக இயக்குனர் விஜய் ராஜேந்திர வர்மா  இந்த படத்திற்காக சில முக்கிய தொழில்நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.