கோபி நயினார் இயக்கத்தில் ஆர்யா: குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார்!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க ஒரு பெண் கலெக்டர் எடுக்கும் பகீரத முயற்சிகளை பரபரப்பாகச் சொன்ன படம் ‘அறம்’. அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கிய இந்த வெற்றிப்படத்தில் கலெக்டராக நயன்தாரா நடித்திருந்தார்.

ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட ‘அறம்’ படத்தை அடுத்து கோபி நயினார் எந்த நடிகரை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்கப்போகிறார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் தமிழ் திரையுலக வட்டாரங்களில் நிலவி வந்தது. இக்கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

கோபி நயினார் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக ஆர்யா நடிக்கிறார். வடசென்னையை கதைக்களமாகக் கொண்ட இந்த படத்தில் அவர் குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். ‘அறம்’ போலவே சமூகக் கருத்துகள் நிறைந்த இப்படத்தை ரவீந்திரன் தயாரிக்கிறார்.

இதர நடிப்புக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.