கிளாஸ்மேட்ஸ் – விமர்சனம்

நடிப்பு: அங்கையற்கண்ணன், பிராணா, குட்டிப்புலி ஷரவணசக்தி, மயில்சாமி, டி.எம்.கார்த்திக், சாம்ஸ், எம்.பி.முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்.ஆர்.ஜாங்கிட் ஐபிஎஸ் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: குட்டிப்புலி ஷரவணசக்தி

ஒளிப்பதிவு: அருண்குமார் செல்வராஜ்

படத்தொகுப்பு: எம்.எஸ்.செல்வம்

இசை: பிரித்வி

தயாரிப்பு: ‘முகவை ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ்’ ஜே.அங்கயற்கண்ணன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

பள்ளியில் ஒன்றாகப் படிப்பவர்களை ‘Classmates’ என்கிறோம். பாரில் ஒன்றாகக் குடிப்பவர்களை ‘Glassmates’ என்கிறார்கள். இந்த கிளாஸ்மேட்ஸ் எந்நேரமும் போதையில் தத்தளிக்கும் மொடாக்குடியர்களாக இருந்துவிட்டால்… அவ்வளவு தான்… அவர்கள் செய்யும் அலப்பறை சொல்லி மாளாது…! தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அவர்கள் ஜாலியான காமெடி பீஸாகவும், உடன் சேர்ந்து வாழ்பவர்களுக்கு பெரிய இம்சையாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட இரண்டு குடிகாரர்களை மையமாக வைத்து, ‘காமெடி டிராமா’ ஜானரில் உருவாகியிருக்கும் படம் தான் ‘கிளாஸ்மேட்ஸ்’.

0a1m

கதை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பதாக கட்டமைத்துள்ளார்கள். படத்தின் துவக்கத்தில், வாய்ஸ் ஓவரில், ”இந்த மாவட்டத்துக்கு ‘முகவை’ என இன்னொரு பெயருண்டு” என்று ஆரம்பித்து, அதன் சரித்திர – பூகோள சிறப்புகளை எல்லாம் சில நொடிகள் சொல்வதோடு, மருது பாண்டியர்கள், கமல்ஹாசன், அப்துல் கலாம் போன்ற வரலாற்று நாயகர்கள் பிறந்த மண் இது என்றெல்லாம் முழங்கி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். எதற்காக இவ்வளவு பெரிய பீடிகை போடுகிறார்கள்? பீரியட் ஃபிலிமாக இருக்குமோ? என்று பார்த்தால்… ’வீணாப்போன’ இரண்டு குடியடிமைகள் பற்றிய படம்! இப்படியாக, இயக்குநரின் காமெடி சென்ஸும், குசும்பும் படத்தின் ஆரம்பத்திலேயே வெளிப்பட்டு விடுகிறது.

கதையின் நாயகன் அங்கயற்கண்ணனும், அவரது மாமா குட்டிப்புலி ஷரவணசக்தியும் எந்நேரமும் குடியும் கும்மாளமுமாக இருக்கும் இணை பிரியாத மொடாக்குடியர்கள்.

அவர்களது ஊரில், குடிநோயாளிகளை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு குணப்படுத்தும் ’மறுவாழ்வு மையம்’ ஒன்று இருக்கிறது. அதில் மருத்துவராக டி.எம்.கார்த்திக் பணிபுரிகிறார். அவரிடம் அங்கயற்கண்ணனும், ஷரவணசக்தியும் வருகிறார்கள். அவர்களை மருத்துவர் திருத்துவதற்கு மாறாக, மருத்துவரை அவர்கள் குடிகாரராக மாற்றிவிடுகிறார்கள். அந்த அளவுக்கு ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என ‘வாழ்வாங்கு வாழ்வு’ வாழ்ந்து வருகிறார்கள்.

டாக்ஸி டிரைவராக இருக்கும் அங்கயற்கண்ணனுக்கும், நாயகி பிராணாவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்தேறி இருக்கிறது. அழகான, அன்பான, அப்பாவியான புதுமனைவி வீட்டில் இருக்க, அங்கயற்கண்ணன் தான் கார் ஓட்டி சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாரில் மதுவுக்கு செலவழித்து, குடித்துக் கரைக்கிறார்.

கைச்செலவுக்கு தினமும் 500 ரூபாய் கொடுத்துவிட்டு டீச்சர் வேலைக்குச் செல்லும் பாசக்கார மனைவி, மழையில் நனைந்தால் ஓடிவந்து குடை பிடிக்கும் அன்பான மகள் என அருமையான ஒரு குடும்பம் தனக்கிருந்தும், அது பற்றி கவலை இல்லாமல், அங்கயற்கண்ணனோடு சேர்ந்து குடித்து, உதவாக்கரையாக ஊர் சுற்றித் திரிகிறார் ஷரவணசக்தி.

பூமியிலுள்ள எல்லா மொடாக்குடியர்களுக்குமான உலக நியதிப்படி, இவர்களுக்கும் தங்கள் மனைவிகளின் நடத்தை மீது சந்தேகம் ஏற்படுகிறது. வேறு ஆண்களுடன் கள்ள உறவு வைத்திருக்கிறார்களோ என மனதுக்குள் குழம்புகிறார்கள். எனினும், இது குறித்து தன் மனைவியிடம் கேட்க துணிச்சல் இல்லாத ஷரவணசக்தி, தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்கிறார். ஆனால், அங்கயற்கண்ணனோ, பாட்டிலால் மனைவியின் மண்டையில் ஓங்கி அடிக்க, மனைவி ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இதனிடையே, தன் கறாரான மனைவி, ஐ.ஏ.எஸ் கனவுடன் பிளஸ்-2 படிக்கும் மகள் அபி நட்சத்திரா ஆகியோரின் அறிவுரையைக் கேட்டு குடிப்பழக்கத்தை கைவிட்டு திருந்தி வாழும் மயில்சாமியை, ‘இவர் மட்டும் எப்படி திருந்தலாம்?’ என கங்கணம் கட்டி, வெற்றிகரமாக அவரை மீண்டும் குடிகாரராக ஆக்கிவிடுகிறார்கள் அந்த ‘கிளாஸ்மேட்ஸ்’.

இந்நிலையில், அங்கயற்கண்ணன், ஷரவணசக்தி, மயில்சாமி ஆகிய மூவரும் உச்சக்கட்ட போதையில் காரில் செல்லும்போது, பயங்கர விபத்து ஏற்படுகிறது. இந்த கோர விபத்தின் விளைவுகள் என்ன? கிளாஸ்மேட்ஸை முழுமையாகத் திருத்தி, குடிப்பழக்கத்தை நிரந்தரமாக கைவிடச் செய்வதற்கான அதிர்ச்சி வைத்தியமாக கிளைமாக்ஸில் என்ன நடக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘கிளாஸ்மேட்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் மையமான இரண்டு கிளாஸ்மேட்ஸில் ஒருவராக, நாயகனாக நடித்திருக்கும் அங்கையற்கண்ணன் அறிமுக நடிகர் தான்; என்றபோதிலும், புதுமுகம் போல் இல்லாமல் அனுபவமிக்க நடிகர் போல தன் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை அசால்ட்டாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார். குடித்துவிட்டு மது போதையில் ரகளையாக காமெடி பண்ணுவது, புது மனைவியிடம் ஆத்மார்த்தமாக காதல் புரிவது, கிளைமாக்ஸில் கையாலாகாத மனிதனாய் கதறி அழுவது என அனைத்து உணர்ச்சிகளையும் துல்லியமாக வெளிப்படுத்தி, நம்பிக்கை நட்சத்திரமாக மின்னியிருக்கிறார்.

கிளாஸ்மேட்ஸில் இன்னொருவராக, நாயகன் அங்கயற்கண்ணனின் மாமாவாக நடித்திருக்கும் ஷரவணசக்தி, தனது வழக்கமான பாணியில் வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியால் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார். தன் மனைவி வேறொருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்தால், அது நியாயம் தான் என தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளும்போது, நகைச்சுவையையும், மனவலியையும் ஒருசேர கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

நாயகன் அங்கயற்கண்ணனின் புதுமனைவியாக, நாயகியாக நடித்திருக்கிறார் பிரணா. கிராமத்துப் பெண்ணுக்குரிய பாந்தமான அழகிய முகத்துடன் அப்பாவியாக நடித்து பார்வையாளர்களின் இதயங்களைக் கொள்ளை கொள்கிறார். பாட்டிலால் அடித்து தன் மண்டையைப் பிளந்த பிறகும் குடிகாரக் கணவனை விட்டுக் கொடுக்காமல் போலீஸிடம் பொய் சொல்லும் காட்சியில் நம் கண்களைக் கலங்க வைத்து விடுகிறார்.

மயில்சாமியின் மகளாக, ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் பிளஸ்-2 மாணவியாக அபி நட்சத்திரா சில காட்சிகளில் மட்டும் வந்தாலும், கதையோட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரம் என்பதால், அதை சரியாக புரிந்துகொண்டு, நிறைவாக நடித்திருக்கிறார்.

முதலில் திருந்தி,பிறகு மீண்டும் குடிகாரராகும் கதாபாத்திரத்தில் வரும் மயில்சாமி, ஷரவணசக்தியின் டீச்சர் மனைவியாக வரும் நடிகை, குடிகாரர்களை குணப்படுத்தும் மருத்துவராக வந்து பெரிய குடிகாரராகும் டி.எம்.கார்த்திக், துபாயில் வேலை செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய பிறகும் கோட்-சூட்டை கழற்றாமல் திரியும் சாம்ஸ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

நாயகனின் மாமாவாக, கிளாஸ்மேட்ஸ் இருவரில் ஒருவராக நடித்திருக்கும் குட்டிப்புலி ஷரவணசக்தியே இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். மனம்விட்டு சிரிக்க வைக்கும் கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் படம் முழுக்க நிரவியுள்ளார். என்றாலும், எமோஷனலாக உள்ளத்தைத் தொடும் காட்சிகளை – குறிப்பாக கிளைமாக்ஸில் – வைக்கத் தவறவில்லை. இறுதியில் குடிப்பழக்கத்துக்கு எதிராக இயக்குநர் முன்வைக்கும் மெசேஜ் வலிமையானது. அதை அவர் புகுத்தியிருக்கும் விதமும் பாராட்டுக்குரியது.

பிரித்வியின் கலக்கலான பாடலிசை மற்றும் காட்சிகளை மெருகேற்றும் பின்னணி இசை, சீர்காழி சிற்பியின் எளிமையான, ஆனால் அருமையான பாடல் வரிகள், அருண்குமார் செல்வராஜின் நேர்த்தியான ஒளிப்பதிவு ஆகியவை இப்படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளன.

‘கிளாஸ்மேட்ஸ்’ – அனைத்துத் தரப்பினரும் கண்டு களிக்கலாம்!