கார்கி – விமர்சனம்

நடிப்பு: சாய் பல்லவி, காளி வெங்கட், ஆர்.எஸ்.சிவாஜி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயபிரகாஷ், டாக்டர் எஸ்.சுதா, கவிதாலயா கிருஷ்ணன், சரவணன் மற்றும் பலர்

இயக்கம்: கவுதம் ராமச்சந்திரன்

தயாரிப்பு: கவுதம் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சிலர்

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: ஸ்ரயந்தி & பிரம்மகிருஷ்ணா அக்கடு

வழங்கல்: 2டி எண்டர்டெய்ன்மெண்ட் பி.லிட்

வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி

மக்கள் தொடர்பு: குமரேசன்

இப்போதெல்லாம் சின்னஞ்சிறு சிறுமிகள் மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படும் கொடூரம் பற்றிய செய்திகள் அன்றாட செய்திகள் ஆகிவிட்டன. அத்தகைய பதைபதைக்கச் செய்யும் பாலியல் பலாத்காரம் தொடர்பான ஒரு வழக்கை, இதய வலியுடன், முற்றிலும் புதிய கோணத்தில் விறுவிறுப்பாக சித்தரித்திருக்கும் படம் ‘கார்கி’.

‘கோர்ட் டிராமா’ ஜானரில் சமீபத்தில் வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’, ‘ஜெய் பீம்’, ‘கடைசி விவசாயி’ ஆகிய கருத்தாழம் மிக்க வெற்றிப்படங்களின் வரிசையில் இடம்பெறத் தகுந்த சிறந்த படம் இது.

இதன் அடித்தளக் கதை என்னவென்றால்,

5தனியார் பள்ளி ஆசிரியை கார்கி (சாய் பல்லவி) திருமணத்துக்கு தயாராகிக்கொண்டிருப்பவர். அவரது அப்பா பரமானந்தம் (ஆர்.எஸ்.சிவாஜி) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். கார்கியின் அம்மா, வீட்டில் இருந்தபடியே இட்லி மாவு அரைத்து விற்பனை செய்கிறார். தங்கை பள்ளி மாணவி. இத்தகைய அன்பான, அமைதியான குடும்பத்தில் ஒருநாள் பெரும் புயல் வீசுகிறது.

வேலைக்குச் சென்றிருந்த கார்கியின் அப்பா பரமானந்தம் அன்று வீடு திரும்பவில்லை. ஏன் என்று தெரிந்துகொள்ள அவர் வேலை பார்க்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குப் போகிறார் கார்கி. அப்பாவை போலீசார் அழைத்துச் சென்றிருப்பது தெரிந்து, போலீஸ் நிலையத்துக்கு விரைகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 9 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், இக்குற்றத்தில் ஈடுபட்டதாக ஒரிசாவைச் சேர்ந்த நான்கு இளைஞர்களும், ஐந்தாவது நபராக செக்யூரிட்டி பரமானந்தமும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது. பேரதிர்ச்சிக்கு ஆளாகிறார் கார்கி.

அப்பாவியான தன் அப்பா இந்த விவகாரத்தில் தவறுதலாக ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாக திடமாக நம்பும் கார்கி, அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து, அவருக்கு விடுதலை பெற்றுத்தர, ஜூனியர் வக்கீலான காளி வெங்கட் உதவியுடன், பல்வேறு அவமானங்களுக்கு மத்தியில் சட்டப்போராட்டம் நடத்துகிறார். இப்போராட்டத்தில் கார்கி வெற்றி பெற்றாரா? ஐந்தாவது குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்து, அவரை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத பல திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமாக விடை அளிக்கிறது மீதிக்கதை.

படத்துக்கு மிகப்பெரிய பலம் சாய் பல்லவி. கதையின் நாயகி கார்கியாக வரும் அவர், அத்தனை பாந்தமாக தன்னை தனது கதாபாத்திரத்துக்குள் பொருத்திக்கொண்டிருக்கிறார். எளிய உடை, மேக்கப் இல்லாத இயற்கையான அழகு, மிகைப்படுத்துதல் இல்லாத இயல்பான நடிப்பு என எளிய குடும்பத்து ஆசிரியையாக உருமாறி, படம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். அந்த பாத்திரத்துக்கு அவரைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. திறமை அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுமாயின் ஒன்றிய, மாநில அரசுகளின் விருதுகள் அவருக்கு நிச்சயம்.

திக்குவாய் குறைப்பாடு உள்ள ஜூனியர் வக்கீலாக வந்து நாயகிக்கு உறுதுணையாக இருக்கும் காளி வெங்கட், நாயகியின் அப்பா பரமானந்தமாக வரும் ஆர்.எஸ்.சிவாஜி, பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் அப்பாவாக வரும் சரவணன், ஆணின் திமிரும் பெண்ணின் வலியும் அறிந்த திருநங்கை நீதிபதியாக வரும் டாக்டர் எஸ்.சுதா, தொலைக்காட்சி நிருபர் அகல்யாவாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி, வக்கீல்களின் அசோசியேஷனுக்கு அஞ்சுகிற பிரபல வக்கீலாக வரும் ஜெயபிரகாஷ், அரசு வக்கீலாக வரும் கவிதாலயா கிருஷ்ணன், பரமானந்தத்தின் சக செக்யூரிட்டியாக வரும் லிவிங்ஸ்டன் என ஒவ்வொருவரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.7

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கை, இதுவரை சொல்லப்படாத, முற்றிலும் வேறு கோணத்தில் சொல்லத் துணிந்த இயக்குனர் கவுதம் ராமச்சந்திரனை எத்தனை பாராட்டினாலும் தகும். இம்மி பிசகினாலும் ஆபாசமும் அருவருப்பும் ஏற்பட்டுவிடக் கூடிய இடங்கள் பல இருந்தாலும், அவற்றை எல்லாம் கம்பியில் நடப்பது போல் மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து நீட்டான படமாக இதை படைத்தளித்திருக்கிறார். எதிர்காலத்தில் இன்னும் இன்னும் அருமையான படங்களை இவரிடம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ‘கார்கி’ மூலம் ஏற்படுத்தியிருக்கிறார். நல்வரவு.

கோவிந்த் வசந்தாவின் இசையும், ஸ்ரையந்தி மற்றும் பிரேம்கிருஷ்ணா அக்கடு ஒளிப்பதிவும் இயக்குனருக்கு உறுதுணையாக இருந்து கதை ஓட்டத்துக்கு வலு சேர்த்துள்ளன.

கார்கி – மகாகவி பாரதி காண விரும்பிய புதுமைப்பெண்! குடும்பத்துடன் கண்டு களியுங்கள்!