“சினிமா பார்ப்பவர்களைவிட நடிப்பவர்கள் அதிகமாயி்ட்டாங்க!” – கவுண்டமணி

நக்கல் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. இந்த படத்தில் அவர் பெயர் கேரவன் கிருஷ்ணன். சினிமாவுக்கு கேரவன் வேன்களை சப்ளை செய்யும் தொழிலதிபராக இதில் நடிப்பதால் அவருக்கு இந்த பெயர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு கவுண்டமணி பேசியதாவது:

சினிமாத்துறை இப்போ ஸ்ட்ரக் ஆகி நிக்குறதா சொல்றாங்க. இப்போ வர்ற சினிமாப்படங்கள் சரியா ஓடுறது இல்லைன்னு பரவலா ஒரு பேச்சு. இதுக்கு ஒரு காரணம் மட்டுமில்ல, பல காரணங்கள் இருக்கு.

இப்போவெல்லாம் சினிமா பார்க்குறவங்களைவிட நடிக்கிறவங்க அதிகமாயிட்டாங்க. இதுனால அதிகமா படங்கள் வந்துக்கிட்டிருக்கு. படம் அதிகமா வந்தாலும் தியேட்டர்கள் கிடைக்க மாட்டேங்குது.  இதுனால பல படங்கள் வெளியாகாமலேயே தேங்கிக் கிடக்குது.

ஒரு படத்தை ஒரு ஷோ ஓட்டுறாங்க. 26 தியேட்டர்ல ஒரு ஷோ ஓடுது. படத்தைப் பார்க்கலாம்னு ஒரு ரசிகன் தியேட்டருக்கு போனா ‘ஸார் அது நைட் ஷோதான் ஓடுது’ன்னு சொல்றாங்க. சரி.. இன்னொரு தியேட்டர்ல ஓடுதே அங்க போய் பார்க்கலாம்னு போனா, ‘ஸார் அது காலைலேயே முடிஞ்சிருச்சே’ன்னு சொல்றாங்க.. இன்னொரு தியேட்டருக்கு ஓடுனா ‘ஸார் அதை நேத்தே தூக்கியாச்சே’ன்னு சொல்றாங்க..

இதை சரி பண்ணணும். ஒரு படத்துக்கு இத்தனை தியேட்டர்தான்னு சொல்லி முறைப்படுத்தணும். கட்டுப்படுத்தணும்.. இதைச் செஞ்சாத்தான் சினிமா பிழைக்கும். சம்பந்தப்பட்டவங்க இதைச் செஞ்சா நல்லாயிருக்கும். இப்படி செய்தால் தயாரிப்பாளர்களுக்கும் ஆரோக்கியம்.. படத்தை வாங்கி வெளியிடுற விநியோகஸ்தர்களுக்கும் ஆரோக்கியம். படத்தை திரையிடுற தியேட்டர்காரர்களுக்கும் ஆரோக்கியம். இப்படி எல்லாரும் ஆரோக்கியமா இருந்தால்தான் நம்ம தமிழ் சினிமாவும் ஆரோக்கியமா இருக்கும்.

சமீபத்துல ஒரு படம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. என் பிரெண்டுகிட்ட ‘அந்தப் படத்தைப் பார்த்தியாப்பா?’ன்னு கேட்டேன். ‘இல்லை’ன்னான். ‘நாளைக்கு பார்த்திட்டு வந்து சொல்லேம்பா’ன்னு சொன்னேன். ‘நாளைக்கு போறேன்’னான். அடுத்த நாள் கேட்டேன். ‘டிக்கெட் ஹவுஸ்புல்’லுன்னான்.. ‘அப்போ படம் நல்லாத்தான போகுது’ண்ணேன்.. ‘இல்ல, நான் சொன்னது ரயில் டிக்கெட்.. நான் ஊருக்கு போயி அந்தப் படத்தைப் பார்க்கலாம்னு இருக்கேன்’னான்.. ஊருக்குப் போயிட்டு வந்தப்புறம் கேட்டேன். ‘நான் போறதுக்குள்ள அந்தப் படத்தைத் தூக்கிட்டாங்க’ன்னான். இதுதான் இப்போ இங்க நடக்குது. அதுனாலதான் சொல்றேன்.. தயாரிப்பாளர் சங்கம் இதுல தலையிட்டு ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்து எல்லா படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்கிற மாதிரி செஞ்சா தமிழ் சினிமா ஆரோக்கியமா இருக்கும்.

‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தோட தயாரிப்பாளரும், இயக்குநரும் என்கிட்ட வந்து கதையைச் சொன்னாங்க. ‘முழுக்க, முழுக்க கேரவன் வேன்லயே படத்தை ஷூட் செய்யப் போறோம்’ன்னு சொன்னாங்க.. அப்புறம் ‘படத்துல ஒரு சோஷியல் மெஸேஜ் சொல்றோம்’ன்னாங்க. அதாவது ‘ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்ற காதலர்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்குற மாதிரி கேரக்டர் உங்கது’ன்னு சொன்னாங்க. நல்ல விஷயமாச்சேன்னு யோசிச்சேன். இப்போ இந்தக் காலத்துக்கு இது அவசியமானதுதான்.. இப்பத்தான் அது மாதிரி நிறைய பிரச்சினையெல்லாம் நம்மூர்ல நடக்குதே.. இப்போதான் இந்த மாதிரி படங்கள் அவசியம்னு நடிக்க ஒத்துக்கிட்டேன்..

படத்துல சென்னைல இருந்து செங்கல்பட்டு வரைக்கும் கதை ரோட்டுலேயும், கேரவன்லேயும் நகரும். அப்புறம் செங்கல்பட்டுல இருந்து மதுரை வரைக்கும் கேரவன்லதான் படமே தொடருது. கடைசியா மதுரைலதான் கிளைமாக்ஸ். அதுக்கப்புறம் ஒரு சின்ன ஆபரேஷன். அதுதான் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.’

இந்தப் படத்துல எல்லா அம்சங்களும் இருக்குது. மதுரைக்குப் போறதுக்குள்ள படத்துல பேமிலி சென்டிமெண்ட், காதல், எமோஷன், இதுகூட கொஞ்சம் திரில்லிங்கும் இருக்கு. அதுனால இந்தப் படம் எல்லாரும் குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம்.

இந்தப் படத்தைப் பார்த்துட்டு தியேட்டர்ல இருந்து வெளில வர்ற ஒவ்வொரு ரசிகனுக்கும் எப்படியிருக்கும்ன்னா.. ஒரு பீட்சா சாப்பிட்டுட்டு, அப்புறம் சிக்கன் பர்கர் சாப்பிட்டுட்டு, அப்புறம் ஒரு கோக் அடிச்சிட்டு, கடைசியா ஒரு கூல்டிரிங்க்ஸும் சாப்பிட்ட திருப்தியோட வெளில வருவாங்க. இது ஒரே கல்லுல மேலே பறக்குற ரெண்டு பிளைட்டை வீழ்த்துற மாதியிருக்கும்.. கண்டிப்பா எல்லாரும் படத்தைப் பாருங்க.

 இவ்வாறு கவுண்டமணி பேசினார்.

 விழாவில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, பிரபாகரன், சுசீந்திரன், பேரரசு, ராம்தாஸ், நடிகர் சந்தானம் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.